பெண்கள் மேம்பாட்டு ஆணையம்

இலங்கையில் பெண்களின் மேம்பாடு மற்றும் உரிமைகளை வலுப்படுத்தும் வகையில் தேசிய பெண்கள் ஆணையகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, இது தொடர்பாக முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து இலங்கை மகளிர் பணியகம் , தேசிய மகளிர் குழு போன்ற அரச நிறுவனங்கள் பெண்கள் நலன்சார் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருகின்றன, எனினும் பெண்களுக்கு எதிராக தற்போது அதிகரித்து வரும் வன்முறைகளை தடுப்பதற்கான சட்ட ரீதியான அதிகாரங்களை கொண்டதாக அந்த அமைப்புகள் இல்லை.

எனவே உத்தேச ஆணையகம் சட்ட ரீதியான அதிகாரங்களை கொண்டதாக இருக்கும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கூறுகின்றது.