தனி சிறப்பு வாய்ந்த தமிழரின் தற்காப்பு கலை – Varma Kalai

வர்மக் கலை (Varma Kalai) ஒரு கண்ணோட்டம்

ஆக்கம்: இளஞ்சைவப் புலவர். த.கி.ஷர்மிதன்.

சித்தர் பெருமக்களால் மனித குலம் உய்யும் பொருட்டு ஆக்கி அளிக்கப்பட்ட அற்புதக் கலை வடிவமே வர்மக் கலையாகும். தமிழரின் தன்னிகரற்ற அறிவாற்றலால், மனித உடலை ஆய்ந்து ஆய்ந்து தெளிந்து , தோன்றிய சிறப்பான கலையே இது. பண்டைத் தமிழரிடையே வாழ்வியற் கலையாக இது காணப்பட்டதும் குறிப்பிடற்குரியது.

varma kalai in action
Varmak kalai warriors

தமிழரிடையே குருமுகமாய் பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு சிறப்பு நிலையில் பேணப்பட்ட வரமம், இன்று தமிழருக்கே தெரியாத கலையாக ஆகிவிட்டது. “வர்மம். அப்படி என்றால் என்ன ?” எனக் கேள்வி எழுப்பும் நிலையிலேயே தமிழராகிய நாம் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பண்டைக் காலத்தே சிறப்பாக வழங்கப்பட்டு வந்த இக்கலை, இன்று மருவி, அருகி, மறைந்து விட்டது என்றே கூறத் தோன்றுகிறது.

தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு தமிழரிடையே உன்னத நிலையில் இருந்த வர்மம், தமிழரால் உலகின் பல நாடுகளுக்கும் பரப்பப்பட்டது. அந்நாடுகளில் இன்றும் வழக்கிலுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை அவ்வாறன்று. சீனாவில் குங்பூ, திம்மாக், ஜப்பானில் அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளும் சீன அக்குபஞ்சர் போன்ற மருத்துவக் கலைகளும் வர்மக் கலையின் திரிந்த வடிவமே எனலாம்.
வர்மம் பற்றி இந்தியன் , ஏழாம் அறிவு போன்ற தமிழ் திரைப்படங்கள் தொன்றுச் சென்றுள்ளன என்று கூறலாம். ஏழாம் அறிவு திரைப்படத்தின் பின்புதான் ‘போதி தர்மன்’ என்பவர் தமிழன் எனத் தமிழருக்கே தெரியும். இவ்வாறான காலச் சூழலில் தமிழரின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் தமிழராகிய நாம் அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவ்வகையில் தமிழரின் தனித்துவமான கலைகளுள் ஒன்றாக விளங்கும் ‘வர்மக் கலை’ பற்றிய கண்ணோட்டமாகவே இக்கட்டுரை அமைகிறது.

வரமம் மற்றும் வர்மக் கலை

முதலில் வரமம் என்றால் என்ன (Varma Kalai)? எனப் பாரப்போம். வர்மம் என்பதற்கு எளிமையாக மனித உடலில் எள்ள மர்மம் புள்ளிகள் எனக் கூறலாம். வர்மம் ஆவது பொதுவாக உடலில் பிராண சக்தி உறைந்துள்ள இடங்களைக் குறிக்கும். இதனையே ‘வர்மப் புள்ளிகள்’ என்கின்றனர். “மனித உடல் சீராக இயங்குவதற்காக உடலில் 108 இடங்களில் நின்று இயங்கும் பிராணக் கலை அல்லது உயிர் நிலைகளே வரமம்” எனப்படுகின்றது.

“உடலுயிர் நாடி தன்னில் உந்திடும் வாசியதாம்
ஊனுடல் மருவியே ஊடாடும் நிலையே வர்மம்”

என்கிறது வர்ம சார நூல். அதாவது மனித உடலில் உள்ள தசை, தமணி, நரம்பு, எலும்புச் சந்திகள் ஆகியவற்றின் சந்திப்பில் உயிர்நிலையின் (பிராணனின்) இருப்பிடமாக உள்ள இடங்கள்தான் வர்மம் ஆகும்.

வர்மக் கலை என்பது “மனித உடலில் உள்ள முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது முனைகள் (ஜீவசக்தி உறைந்துள்ள இடங்கள்) பற்றிய அறிவை மையமாகக் கொண்டதொரு தற்காப்பு மற்றும் மருத்துவக் கலையாகும். மனித உடலில் உள்ள உயிர் நிலை ஓட்டத்தைக் கணித்து உருவாக்கப்பட்ட மருத்துவ சாத்திரமாகவும் இது திகழ்கிறது. வர்ம தலங்கள் பற்றிய அறிவை ஆதாரமாகக் கொண்டு அதனை எவ்வாறு மனிதகுல நன்மைக்கு பணன்படுத்தலாம் என்பதை அடிப்படையாகக் கொண்ட கலை வர்மம் எனலாம். ‘உயிர்க் காப்பு’ என்பதே வர்மத்தின் அடிநாதம். அன்றி, இதனை வேறு காரணங்களுக்காகப் (கொலை, சுயநலம், வக்கிரச் செயல்கள் போன்ற) பயன்படுத்தல் முற்றாக விலக்கப்பட்டுள்ளது. தீய செயல்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது எனும் காரணத்தால்தான் வர்மக் கலை மறைவில் இரகசியமாகப் பேணப்பட்டது. (இது மறைந்து போனதும் இதனால்தான் என்னமோ???) தீய செயலுக்கு இதனைப் பயன்படுத்துவர் எனும் நல்லெண்ணம் காரணமாக இக்கலை நம்பத்தகுந்த நபர்களுக்கு மாத்திரமே போதிக்கப்படுகிறது. 12 வருடங்கள் சீடனாக இருந்த பின் குருவுக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே வர்மக் கலையைக் கற்றுத் தரவேண்டும் என சித்தர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வர்மக் கலையின் வேறு பெயர்கள்

‘வரமம்’ எனப் பொதுவாக அழைக்கப்படினும் இக்கலை பல காரண மற்றும் சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்குகிறது. அவ்வகையில் கீழ்வரும் பெயர்களாலும் இக்கலை அறியப்படுகிறது.

காலன், நரம்படி,
முறிவு, ஆவி,
சூட்சுமம்/ சூட்சம், காற்று,
அடக்கம், பிராணன்,
ஏமம், வன்மம்,
ஒடிறு, அருவம்,
மர்மம், ஈடு,
வண்ணம், சரம்,
காலம், வாசிதானம்

வர்ம நூல்கள்

வர்மக் கலையின் அடிப்படைப் பனுவல்களாக சித்தர் பெருமக்கள் இயற்றிய நூல்கள் மற்றும் சுவடிகள் விளங்குகின்றன. பெரும்பாலானவை சுவடிகளே எனலாம். இவை பிற்காலத்தே நூல் வடிவம் பெற்றன எனலாம். சித்தர்கள் ஆக்கி அளித்த நூல்களை ஆதரமாக வைத்து பிற்பட்ட காலத்தே வந்த ஆசான்களும் வர்மம் சார் நூல்களை ஆக்கிய அளித்துள்ளனர் எனலாம். வர்ம நூல்களில் ஆதியானது சித்தர் பெருமான் ‘அகத்தியர்’ அளித்தவையாகும். இவற்றோடு போகர், புலிப்பாணி போன்ற சித்தர்கள் அருளிய நூல்களும் சிறப்பானவை. வர்ம நூல்களின் பட்டியல் வருமாறு:

வர்ம சூத்திரம், வர்ம தண்டூசி,
வர்ம கண்ணாடி, வர்ம திறவு கோல்,
வர்ம ஊசி, ஒடிவு முறிவு சாரி,
வர்ம குடோரி, தட்டு வர்ம நிதானம்,
வர்ம ஆணி, வர்ம லாட சூத்திரம்,
வர்ம பீரங்கி-100, வர்ம காண்டம்,
வர்ம காவியம், வர்ம சூட்சம்,
வர்ம கண்டி, வர்ம அளவு நூல்,
வர்ம சாத்திரம், வர்ம சஞ்சீவி

எனப் பல நூல்கள் இருந்தாலும், இன்று ஒரு சில நூல்களே நமக்குக் கிடைக்கின்றன.

வர்மக் கலை பூமிக்கு வந்த வரலாறு

lord shiva varma kalai
Lord Shiva

தெய்வீகக் கலையான வர்மக் கலையின் தோற்றம் பற்றி பல கர்ண பரம்பரைக் கதைகள் காணப்படுகின்றன. ஆனாலும் அவை அனைத்தினதும் சாரம், இக்கலை சிவனிடம் இருந்தே தோன்றியது என்பதாகும். ஒவ்வொரு பண்பாட்டு மரபினரும் தத்தம் கலை வடிவங்களை , உயரிடத்திலும் மரியாதையாகவும் புனிதமாகவும் போற்றுகின்றனர். அவ்வகையில் அக்கலைகளின் ஆதி கருத்தாவாக தாம் போற்றும் தெய்வத்தையே கருதுவது மரபு. சீனர்கள் குங்பூவின் குருவாக புத்தரையே கருதுவது இங்கு மனங்கொளத்தக்கது. அவ்வாறே சித்தர் பெருமக்களும் ஆதிசித்தனாகிய சிவனிடமிருந்தே இக்கலை தோன்றியதாக கூறுவது இயல்பானதே.

ஒரு கதையின் படி, ஒருநாள் சிவனும் உமையும் ‘சிவகிரி’ எனும் மலைக்குச் சென்றபோது, அங்கு ஒரு வேடன் மரத்தில் இருந்து தவறி விழுந்து மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்டனர். பார்வதிதேவி கருணை கொண்டு அவனை காக்குமாறு சிவனிடம் வேண்டினார். சிவனும் அதற்கிணங்கி, தன்னிடமிருந்த பொற்பிரம்பால் வேடனைத் தட்டிவிட, வேடன் மயக்கம் தெளிந்து இயல்பு நிலை அடைந்தான். பார்வதி இச்செயல் குறித்து வினவ; சிவன் பார்வதிக்கு, மனித உடலில் வர்மம், அடங்கல் என இரு விதமான தானங்கள் உள்ளன என்பதையும் வேறு பல வர்ம இரகசியங்களையும் உபதேசம் செய்தார் எனக் கூறப்படுகிறது.

வர்ம காவியத்தில், சிவன், நந்தி என்போர் வர்மத்தை அறிந்திருந்தனர். பின் இவர்களிடம் இருந்து சக்தி கற்றுக் கொண்டார். சக்தி, பின் அதனை வேலனுக்கு உபதேசம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வகையில், சூரபத்மன் முனிவர்களைத் துன்புறுத்தியபோது ரிசிகள் சிவனிடம் முறையிட்டனர். சிவனும் வேலனை அழைத்து ரிசிகளைக் காக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். முருகன் சக்தியிடம் சென்று தன்னால் சூரபத்மனைக் கொல்ல முடியாது எனப் புலம்பினார். அவ்வேளை சக்தி, சிவனும், நந்தியும் வர்மக்கலை அறிந்திருந்தனர். அதனை தான் பெற்றதாகக் கூறி, முருகனுக்கும் அவ்வர்மக்கலையை உபதேசித்தார். அவ்வாறே வர்மக்கலையை உபயோகித்து அசுரனை முருகன் கொண்டார் என்கிறது வர்ம காவியம்.

முருகனிடம் இருந்து அகத்தியருக்கு வந்தது என்கிறது தட்டு வர்ம நிதானம்.

மற்றுமொரு கதையின் படி , சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வர்மம் கற்கும் முகமாக இந்திரனை நாடினர். இந்திரன் அவர்களை அலட்சியம் செய்ய, சிவனிடம் சென்றனர். சிவனும், அய்யன், கையன் எனும் இருவருக்கு வர்மம் போதித்து, வர்மத்தை அம்மன்னர்களுக்குக் கற்றுக் கொடுக்குமாறு பூலோகம் அனுப்பினார். ஆரியங்கா எனும் பகுதிக்கு இவர்கள் வந்தனர். இங்கு பாண்டிய மன்னன் இவர்களை அலட்சியம் செய்ததுடன் ஏமாற்றினர். இதனால் இவர்கள் சேர மன்னனிடம் சென்றனர். சேரனும் அவர்களை வரவேற்று, வர்மத்தைக் கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்தான். அவர்களும் குரு – சீட முறையில் வர்மத்தைக் கற்றுக் கொடுத்தனர் எனப்படுகிறது.

இவ்வாறு பல கதைகள் காணப்படினும், ஆதாரங்களின் வழி சித்தர் மரபினூடே இக்கலை மானிடருக்குக் கையளிக்கப்பட்டது என்பது தெளிவு.

வர்மக் கலை – குருபரம்பரை

தெய்வீகக் கலையான வர்மம், மானிட நலனுக்காக ஆதிசிவனால் அளிக்கப்பட்டது. இதன்படி சிவனிடமிருந்து நந்திக்கும் இவ்விருவரிடமிருந்து சக்திக்கும் சக்தியிடமிருந்து முருகனுக்கும் முருகனிடமிருந்து அகத்தியருக்கும் குரு சீட முறையில் கையளிக்கப்பட்டது. அகத்தியர், மானுட குலத்துக்காக அதனை ஆக்கியளித்தார் என்கிறது வர்ம காவியம். இதனை,

Agasthiyar varma kalai

“…கேள் நீ
நந்தியோடு சிவனும் சொன்ன காவியத்தில் படுவர்மம் பன்னிரண்டும்
நொந்தமுடன் தொடுவர்மம் தொண்ணூற்றாறினொடு
தட்டுமுறையுடன் தன்தடை முறையுந்தானறிய
சூட்சமுடன் இடமுரைத்தார் கேள்
உந்தனுக்கு இந்த முறை நன்றாய் தோன்றும்
உலகுதனிலொருவருக்கும் விளம்பிடாதே…” – (வர்ம காவியம்)

எனும் பாடல் தெளிவுபடுத்துகிறது. மேலும், சிவன் சக்திக்கு உபதேசித்தார், சக்தியிடம் இருந்து நந்தீசர் பெற்றார். நந்தீசர் தனக்கு உபதேசித்ததாக அகத்தியர் குறிப்பிடுகின்றமையும் கவனிக்கத்தக்கது. இதனை,

“பாதிமதியணிபரமன் தேவிக்கிசைய
பணிவுடனே தேவியிடம் நந்தீசர்வாங்கி
மகிழ்வாக எந்தனுக்கு சொன்னாரப்பா
வேதனை வாராமல் வர்மசூக்குமம்
விபரமுடன் உந்தனுக்கு உரைக்கக்கேளே” – (ஒடிவுமுறிவுசாரி)

எனும் பாடலால் அறிய முடிகிறது. போகரின் வர்ம சூத்திரம், புலிப்பாணியின் வர்ம காண்டம் என்பனவும் இக்கருத்தையே கூறுகின்றன. எவ்வாறாயினும் மானிட குலத்துக்கு அதனைக் கையளித்தவர் சித்தருள் சிறந்த அகத்தியரே என்பரது முடிவு. பொதிகை மலையில் (குற்றால மலை) இக்கலை உருவானதாக அகத்தியர் குறிப்பிடுகிறார். பின். போகர், புலிப்பாணி போன்றோரால் இது மேலும் பேணப்பட்டு வளர்க்கப்பட்டது என அறியப்படுகிறது.

ஜடாவர்மப் பாண்டியன் இக்கலையில் சிறந்து வழங்கினான் என்றும் தமிழகத்தே சிறப்புற்றிருந்த இக்கலை கன்னடம், கேரளா போன்ற இந்தியப் பகுதிகளுக்கும், சீனா (போதி தர்மா), இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவிற்று என அறியப்படுகிறது.

வர்மக் கலையின் வகைகள்

வர்மக் கலை பிரதானமாக நான்கு வகைப்படுகிறது. அவை; படுவர்மம், தொடுவர்மம், தட்டு வர்மம் மற்றும் நோக்கு வர்மம் என்பனவாகும்.

படுவர்மம் : படுவர்மம் என்பது பயங்கரமானதும் மிகவும் ஆபத்தானதுமான வர்மம் ஆகும். இது பனிரெண்டு வகைப்படும். இவ்வர்மம் முஷ்டியால் தாக்கப்படும். இவ்வர்மத்தால் தாக்கப்பட்டால் அவ்விடம் குளிர்ச்சியாக இருக்கும். தாக்குதல் பலமாக இருப்பின் உயிரிழப்பு ஏற்படும். இதனைத் தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தொடுவர்மம் : இது படுவர்மம் போன்று பலமாகத் தட்டாமல் சில இடங்களில் பலமாகவும் சில இடங்களில் மென்மையாகவும் விரல்களால் அழுத்துவது ஆகும். இதற்கு மரண பயம் இல்லை. எனினும் நாள்பட நாள்பட அதன் பாதிப்பு அதிகரிக்கும். கைகால் செயலிழந்து போகவும் வாய்ப்புண்டு.

தட்டு வர்மம் : இது விரலில் வலுவைத் தேக்கி வைத்து வர்மப் புள்ளியில் மூர்க்கத்தனமாக அன்றி வலுவாக அழுத்துவதாகும். இது வலி தெரியாமல் தேகத்திற்குப் பாதிப்பைத் தருகின்ற அபூர்வ வர்மம் ஆகும்.

நோக்கு வர்மம் : இது ‘மெய்தீண்டாக் கலை’ எனவும் அழைக்கப்படுகிறது. மேற்கூறிய வர்மங்களை உபயோகிக்க ஒருவரது உடலைத் தொட வேண்டும். ஆனால் நோக்கு வர்மத்தை உபயோகிக்க உடலைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. இதனாலே அது மெய்தீண்டாக் கலை எனப்படுகிறது. நோக்கு வர்மம் என்பது “ பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி மனோசக்தியால் விளைவுகளை உண்டாக்குவதாகும்”. இது ஏனைய மூன்று வர்மமங்களிலும் பார்க்க மிக்க ஆபத்தானது. இக்கலையை கற்ற ஒருவருக்கு நிகர் யாருமில்லை என்கிறார் அகத்தியர். குறைந்த இடைவெளியில் உள்ளவர் மீதே இதனைப் பிரயோகிக்க முடியும். ஆழ்மன வசப்படுத்தலே இதன் நாதம். (ஏழாம் அறிவு திரைப்படத்தில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது). இதனை “HYPNOTISM” என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர்.

வர்ம தானங்கள்

varma kalai points வர்ம தானங்கள் என்பது வர்மம் எனப்படும் உயிர்நிலை உறைவிடங்களாகும். இது வர்மப் புள்ளிகள், வர்ம முனைகள், வர்ம ஸ்தானங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இது பற்றி சிறப்பாக ‘வர்ம அளவுநூல்’ கூறுகிறது.

வர்ம முனைகள் என்பது “வெளித் தோற்றத்தில் புலப்படாமல் இரகசியமாக, மனித உடலில் உயிர்நிலை ஓட்டம் உள்ள நரம்பு முனைகள் ஆகும்”. எந்த இடத்தில் அடிபட்டால் உயிர்ச் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்களே வர்மப் புள்ளிகள் எனலாம்.
varma kalai points
வர்மப் புள்ளிகள் மனித உடலில் தலை இருந்து பாதம் வரை பரந்துள்ளன. அவ்வகையில் உடலில் 108 வர்ம தானங்கள் இருப்பதாக வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வெண்ணிக்கையில் வேறுபாடு காணப்பட்டாலும் பொதுவாக 108 என்ற எண்ணிக்கையே கூறப்படுகிறது. வரமப் புள்ளிகள் உள்ள இடங்களும் எண்ணிக்கையும் வருமாறு:

சிரசு – கண்டம் 25
கண்டம் – நாபி 45
நாபி – மூலம் 09
கைகள் 14
கால்கள் 15
மொத்தம் 108

(ஆதாரம் : வர்ம பீரங்கி 100, வர்மக் கண்ணாடி 500, வர்ம லாட சூத்திரம் 300)

இவ் 108 வர்ம ஸ்தானங்களிலும் தலையானது ‘தனஞ்சயன்’ எனும் வர்மம் ஆகும். இது தலையில் உள்ளது. இதில் தாக்கினால் உயிர் இழப்பு ஏற்படும்.(தகவலுக்கு மட்டும் பிரயோகிக்க அல்ல).

“ஆச்சென்றால் காலில் மூவைந்தாச்சே அப்படி கையில் ஈரேழுமாச்சு
மெச்சென்று உந்திக்குக் கீழ்மேவிய ஒன்பதுவுமாச்சு
நேச்சென்றால் உந்திக்கும் மேல் நேர்மூன்று ஆறேழாச்சு
மிச்சென்றால் கண்டத்திற்கும் மேல் அய்யஞ்சு
அதுவும் பாரே” – (வர்ம லாட சூத்திரம் 300),
“தானன தலை நடுவில் கொண்டைகொல்லி
சநேன்றதுகுங் கீழ் சீருங்கோல்லி
ஊனன இதற்கு நலன்குலத்தின் கீழே
உற்றதொரு பிடரி வர்மமாகும் பரு
என்ன உச்சியிலே இருந்து எட்டு விரல் கீழ்
சரிதி வர்மமேனவே சொல்வர்
வாணன் இதற்கு இரு விரலின் கீழே
மகிமையுள்ள போர்சை என்ற காலமே ”

“காலமாம் அதுக்கும் ஒரு இறைக்கும் கீழ்
கனமான குதி என்ற காலமாகும்
மூலமாம் காதில் சிருதண்டருகில் தானே
முறையன் செவிகுதி கலமேன்பர்
காலமாம் இதில் இரண்டிரைக்கும் மேலே
குணமான பொய்கை என்ற காலமாகும்
தூலமம் கடைகண்ணில் இறைக்குள்ளே தன
துலங்குகின்ற நட்சத்திர களமென்னே ”

“என்னவே இதுக்கும் இரண்டிரைக்கும் கீழே
இதமான கம்பூதறி காலமாகும்
துள்ளவே அதற்கு மேல் வளம் இறை மூன்றில் தன
சுருக்கான மூர்த்தி என்ற கலமேன்பர்
முன்னமே சொன்னதின் கீழ் அரை இறைக்குள்ளே
முறையான திலர்தமென்ற காலமாகும்
இன்னுமே அரை இறையின் கீழ் மின்வெட்டி வர்மம்
இசைந்த கருவிழியருகில் மந்திரகலமே ”

“மந்திரமாம் கலதொடக வர்மம்
வலுவாக இருபுரமுமேனவே சொல்வர்
அந்தரமம் மச்சி நாடு நேர் வர்மமாகும்
அதுக்கும் அரை இறையின் கீழ் பசி வர்மம்
சுந்தரமாம் நாசி மதி கண்ணாடி காலம்
துல்லியமாய் கண்ட நாடு பல வர்மமாகும்
மந்திரமாம் அதனருகில் சுண்டிகை காலம்
சொல்லு வர்மத்தின் அருகில் கோண வர்மமே ”

“குரியன செவியின் கீழ் அங்குலமே நாளில்
குறுகிற உதிரகலமது ஆகும் ஆகும்
நெறியான கீழ் நாடி ஒட்டு வர்மம்
நின்றவை அருகுரண்டும் உரக்க காலம்
அறிவான குரல் வலையில் சங்கு திரி காலம்
அதுக்குங் கீழ் அங்குலம் நாளில் சிமை வர்மாந்தன்
பொறியான பொறியது தன கழுத்தின் மேலே
பூண்ட உச்சி தணிக்கும் கீழ் புகல்தவரே” – (வர்ம சூத்திரம்)
என வரும் பாடல்கள் உடலில் உள்ள வர்ம முனைகள் பற்றி எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன.
(வர்மப் புள்ளிகள் பற்றிய விரிவான தகவல்களை வரும் பதிவில் காண்போம். நன்றி! )

பயன்பட்டவை:
1.வர்ம மருத்துவ அடிப்படை – மின்னூல்
2.வர்மக் கலை – கா.காளிதாசன்
3.வர்ம சூத்திரம்

வர்மம் அறி…கடைப்பிடி..வளர் !
வர்ம மர்மம் தொடரும்…
வாசகர்களுக்கு நன்றி !!!

குறிச் சொற்கள் : தமிழர், தமிழர் கலை, வர்மம், மருத்துவம், தற்காப்பு, சித்தர் அறிவியல்