முந்தைய பதிவிற்கு ஆதரவு வழங்கிய அனைத்து வாசகர்களுக்கும் உளம் உவந்த நன்றிகள். இன்றையப் பதிவில் வர்மக் கலையில் காணப் பெறும் வகைகள் குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கின்றார். அவை : படுவர்மம், தொடுவர்மம், தட்டு வர்மம் மற்றும் நோக்கு வர்மம் என்பனவாகும்.

01.படுவர்மம்

யங்கரமானதும் மிகவும் ஆபத்தானதுமான வர்மம் இதுவாகும். இவ்வர்மம் முஷ்டியால் தாக்கப்படும். ‘படு’ என்றால் ‘பெருகச் செய்’, ‘துன்புறுத்து’, ‘அழித்தல் செய்’ எனப் பல பொருள் படும். இந்த வர்மங்கள் “துன்பத்தைப் பெருகச் செய்து அழிவையும் (மரணத்தையும்) ஏற்படுத்துவதால்” இப்பெயர் பெற்றது. இவ்வர்மத்தால் தாக்கப்பட்டால் அவ்விடம் குளிர்ச்சியாக இருக்கும். தாக்குதல் பலமாக இருப்பின் உயிரிழப்பு ஏற்படும். இதனைத் தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். மனித உடலில் படுவர்ம ஸ்தானங்களாகப் பனிரெண்டு இடங்கள் சுட்டப்படுகின்றன. “பாரப்பா படுவர்மம் பனிரண்டும்” என்கிறது வர்ம சூத்திரம். இவ்விடங்களைக் கொண்டே படுவர்மம் பனிரெண்டு எனவழங்கப்படுகிறது. படு வர்மம் பனிரெண்டும் வருமாறு,

திலர்த காலம் : நெற்றியின் நடுப்பகுதியில் இரு புருவ மத்தியில் திலகம் (பொட்டு) இடும் இடத்திற்குக் கீழே இந்த வர்மப் புள்ளி காணப்படும்.

திலர்த காலம்
திலர்த காலம்

பிடரிக் கால வர்மம் : தலையின் பின்புறம் பிடரிப் பகுதியில் கழுத்தெலும்பும் (முதுகுத் தண்டும் ) தலையும் இணையும் பகுதியில் இவ்வர்மம் உள்ளது. தலையைக் குனிந்து கை வைத்துப் பார்க்கும் போது இவ்விடம் பள்ளமாகத் தெரியும்.

பிடரிக் கால வர்மம்
பிடரிக் கால வர்மம்

“ஆச்சரியம் ஆச்சரியம் இதுபோல் உண்டோ  தாமப்பா வளை முடிந்த தலத்தில் தானே சார்பவே குழிவதிலே பிடரிக் காலம் ” – வர்ம சூத்திரம்

செவிக்குத்தி வர்மம் : செவி அருகில் ஓடும் தண்டுப் பகுதியின் அருகாமையில் இவ்வர்மமப் புள்ளி உள்ளது.

“காடப்பா காதில் சிறு தண்டில் தானே கலங்காது செவிக்குற்றிக் காலம்” – வர்ம சூத்திரம்

நட்சத்திரக் காலம் : கடைக்கண் பகுதியில் ஒரு விரல்(இங்கு ஒரு விரல் என்பது ஒரு நெல் அளவைக் குறிக்கும்) தள்ளி இவ்வர்மப் புள்ளி காணப்படுகிறது.

உறக்க காலம் : காதிற்கு நேர் கீழாக தாடை எலும்பின் கீழ் பகுதியில் குரல் வளையின் வல இடப் பகுதிகளில் காணப்படும்.

தும்மி வர்மம் : தொண்டையின் கீழ்க் குழியில் காணப்படும். இதனையே தொண்டைக் குழி என நாம் அழைக்கிறோம்.

நேர் வர்மம் : தொண்டைக் குழிக்கு நேர் கீழே இரு மார்பு எலும்புகள் சந்திக்கும் கூம்புப் பகுதியின் பள்ளத்திற்கு இரு தீரல் அளவு கீழே உள்ளது.

அடம்ப கால வர்மம் : முண்டெலும்பில் இருந்து 3 விரல் மேலாக உள்ளது.

உறுமிக் காலம் : தொப்புளில் இருந்து நான்கு விரற்கிடை மேல் உள்ளது.

மூத்திரக் காலம் : தொப்புளுக்கு நான்கு விரற்கடை கீழாக உள்ளது.

பெரிய அத்தி சுருக்கி வர்மம் மற்றும் சிறிய அத்தி சுருக்கி வர்மம் : வலிய அத்தி சுருக்கி வர்மம் விலா முள்ளெலும்பின் இரு விரலின் கீழேயும் சிறிய அத்தி சுருக்கிவர்மம் விலா முண்டெலும்பில் இருந்து 3 விரல் கீழேயும் காணப்படும்.

கல்லடைக் காலம் : இலிங்கக் கட்டின் அடிப்பாகத்தில் விருக்க (விதைகள்) சஞ்சிகள் சேரும் இடத்தில் உள்ளது.

படுவர்மங்கள் பொதுவாக உடம்பின் நடுவிலே ஓடும். படுவர்மங்களில் 8 வர்மங்கள் தலைப் பகுதியிலே உள்ளன. எல்லோரும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

02.தொடுவர்மம்

தொடுவதன் மூலம் ஏற்படும் வர்மம் இதுவாகும். இது படுவர்மம் போன்று பலமாகத் தட்டாமல் சில இடங்களில் பலமாகவும் சில இடங்களில் மென்மையாகவும் விரல்களால் அழுத்துவதால் ஏற்படுகிறது. இதை எளிதில் குணப்படுத்த முடியும். இதற்கு மரண பயம் இல்லை. எனினும் நாள்பட நாள்பட அதன் பாதிப்பு அதிகரிக்கும். கைகால் செயலிழந்து போகவும் வாய்ப்புண்டு. பிதுக்கல், பின்னல், ஊன்றல், அமர்த்தல், ஏந்தல், தாக்கல், தள்ளல் போன்ற முறைகளால் இவ்வர்மத்தை ஏற்படுத்துவர். மனித உடலில் 96 தொடுவர்ம ஸ்தானங்கள் உள்ளதாகச் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“கட்டான ஈராறும் வழியெட்டாகி கருதினால் தொடுவர்மம் தொண்ணூற்றாறு” – வர்ம ஒடி முறிவு சார சூத்திரம் 1200

“பாங்கான தொடுவர்மம் தொண்ணூற்றாறும்” – வர்ம சூத்திரம்

எனச் சுட்டுகின்றன வர்ம நூல்கள்.

தலையில் மட்டும் 19 தொடுவர்மப் புள்ளிகள் காணப்படுகின்றன.அவற்றில், பூட்டு எலும்பு வர்மம், சுழியாடி வர்மம், பொய்கை வர்மம், நெற்றி வர்மம், லலாட மூர்த்தி வர்மம், கும்பிடு காலம் போன்றன குறிப்பிடத்தக்கவை. தொடுவர்மங்கள் பொதுவாக உடலின் இரு பக்கமும் ஓடுவதாகும்.

பூட்டு எலும்பு வர்மம்,
பூட்டு எலும்பு வர்மம்,

03.தட்டு வர்மம்

து ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும். இம்முறையில் தாக்கப் படுபவரை இதற்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குணப்படுத்த முடியும்.

இது விரலில் வலுவைத் தேக்கி வைத்து வர்மப் புள்ளியில் மூர்க்கத்தனமாக அன்றி வலுவாக அழுத்துவதாகும். இது வலி தெரியாமல் தேகத்திற்குப் பாதிப்பைத் தருகின்ற அபூர்வ வர்மம் ஆகும். மனித உடலில் 08 தட்டு வர்மப் புள்ளிகள் உள்ளன. பெரும் மூளை வர்மம் (உச்சந் தலையில் சுளி அருகே பெரும் மூளையில் உள்ளது), கச்சை வர்மம் (முதுகெலும்பு முடிவடையும் பகுதியில் உள்ளது) போன்றன தட்டு வர்மங்களாகும்.

Varmam Points
Varmam Points

04.நோக்கு வர்மம் (மெய் தீண்டாக் காலம்)

பார்வையால் பாதிப்பை ஏற்படுத்துவது இதுவாகும். இது ‘மெய்தீண்டாக் கலை’ எனவும் அழைக்கப்படுகிறது. மேற்கூறிய வர்மங்களை உபயோகிக்க ஒருவரது உடலைத் தொட வேண்டும். ஆனால் நோக்கு வர்மத்தை உபயோகிக்க உடலைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. இதனாலே அது மெய்தீண்டாக் கலை எனப்படுகிறது. உடம்பைத் தொடாமல் போடும் வர்மம், உடம்பில் போடக் கூடாத வர்மம் என்றும் சொல்லலாம்.

“வேறப்பா மெய் தீண்டாக் காலம்” – வர்ம சூத்திரம்

நோக்கு வர்மம் என்பது “ பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி

மனோசக்தியால் விளைவுகளை உண்டாக்குவதாகும்”. இது ஏனைய மூன்று

வர்மமங்களிலும் பார்க்க மிக்க ஆபத்தானது. இக்கலையை கற்ற ஒருவருக்கு நிகர் யாருமில்லை என்கிறார் அகத்தியர். குறைந்த இடைவெளியில் உள்ளவர் மீதே இதனைப் பிரயோகிக்க முடியும். ஆழ்மன வசப்படுத்தலே இதன் நாதம். (ஏழாம் அறிவு

திரைப்படத்தில் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது). இதனை “HYPNOTISM” என ஆங்கிலத்தில் வழங்குகின்றனர்.

முறைப்படி தியான சக்தியை வளர்த்து, குண்டலினியைக் கிளம்பச் செய்து, ஆன்ம தாமரையில் அடங்கச் செய்து, தனது சக்தியைக் கிளப்பி மணிபூரகத்தில் (நாபி) நிறுத்தி, திருமாலை வணங்கி, ஒருவரை மணிபூரகத்தில் (தண்ணீர்) உற்றுப் பார்த்தால், எதிரியின் உடலில் அந்த ஸ்தானத்தில் பாதிப்பு ஏற்பட்டு உடம்பின் நீர்ச் சத்துப் பகுதி(இரத்தம், சலம்) தடைப்படும். இதுபோல் பார்க்கும் இடத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதால் நோக்கு வர்மம் எனப்படுகிறது. இது சித்தர்களுக்குத்தான் சித்தியாகுமே தவிர எத்தர்களுக்குச் சித்தியாகா.

மேற்படி வர்மங்கள் பிரதானமானவை எனினும் உள்வர்மம் (06), மயக்கு வர்மம் (12), நக்கு வர்மம் என மேலும் பல வகை வர்மங்கள் கூறப்பட்டுள்ளன.

வர்ம மர்மம் தொடரும்…

வர்மம் அறி… தெளி… கடைப்பிடி… வளர் !

கருவி நூல்கள் :
01.வர்ம மருத்துவ அடிப்படை – மின்னூல்
02.வர்ம சூத்திரம்
03.வர்ம சூத்திர விளக்கம் – ப.சு. மணியன்

முந்தைய பதிவு 

தொகுப்பாக்கம் : இளஞ்சைவப் புலவர். த.கி.ஷர்மிதன்.