Update கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பெற்றோலிய வள கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆரம்பித்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட அந்த தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.தெமடகொடை பெற்றோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரை கைது செய்யுமாறு கோரி இவர்கள் ​நேற்றிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கொலன்னாவை , சபுகஸ்கந்த , முத்துராஜவெல எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் , முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று பிற்பகல் கொழும்பு குற்றவியல் பிரிவினால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.

நேற்று பிற்பகல் முன்னாள் பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் நுழைய முற்பட்ட போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் , அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் , சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவை கைது செய்யுமாறு வலியுறுத்தி பெற்றோலிய வள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]