கனவுகள் கற்பனைகள் என்பதன் ஆரம்ப புள்ளி எதுவாக இருக்கும் ?
எனக்குள் எப்படி ஆரம்பித்தது இந்த கற்பனைகளின் பயணம் என்று அடிக்கடி யோசிப்பேன் …. பனி படர்ந்த கண்ணாடியில் தெரியும் முகத்தோற்றம் மாதிரி
என் நினைவுகளில் நிழலாடுகிறது அந்த பால்யகால சம்பவங்கள்
தாத்தாக்கள் பாட்டிகளிடம் கதை கேட்ட நாட்கள் அவை . அவர்கள் சொல்லச்சொல்ல அதை மனதில் காட்சிப்படுத்திக்கொள்வது என் வழக்கம் . பாட்டிகளின் உலகத்தோடு ஆரம்பித்த இந்த வழக்கம் எல்லோரிடமும் கதை கேட்கும் நச்சரிப்பாகவே மாறியது.  ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு கதை இருக்கும்; பல சமயம் ஒரே கதை வெவ்வேறு விதத்தில் வெளிப்படும் .
எதுவாக இருந்தாலும் எனக்கு கதைகள் ,அது தரும் கற்பனைகள், தனிமையை துரத்த தேவைப்பட்டது .
காலப்போக்கில் பால்யம் தொலைய சினிமாவுக்குள் ஐக்கியமானேன்.
சினிமா தரும் கற்பனை உலகில் வசிக்க ஆரம்பித்த பிறகு கதைகளோடு வாழவே ஆரம்பித்து விட்டேன் . என்றோ கேட்ட கதைகளின் எச்சங்கள் இன்றைய பொழுதோடு சேர்ந்து கனவுகளில் துரத்தும் . அதை அரையுறக்கத்தில் ரசித்துக் கொண்டே உறங்கியும் உறங்காமலும் இரவை கழிப்பேன்.  இது என் வாழ்க்கையில் வழக்கமான விடயங்கள். நான் கவனிக்க மறந்த இந்த விடயத்தை, சற்று உணர்த்திய திரைப்படம் இது .படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு கனவுலகத்தை கட்டி எழுப்பியதோடு,  கதை கேட்கும் பால்ய காலத்துக்கு எம்மை அழைத்துச் செல்கிறது  Spirited Away.

 

சிகிரோ பத்து வயது சிறுமி .தன் பெற்றோருடன் புதிய நகரத்துக்கு காரில் சென்று கொண்டிருகிறாள் .கொஞ்ச தூரம் சென்றதும் சாலை முடிந்து மண் சாலை தொடங்க தவறான பாதையில் வந்ததை உணர்கிறார்கள் . பாதை முடிய ஒரு பழைய கட்டிடம் குகை போலிருக்க அதற்குள் சென்று பார்கிறார்கள் . குகையை கடந்ததும் ஒரு திறந்தவெளி வருகிறது . பரந்த புல்வெளி ,அழகிய குன்றுகள் என்று வித்தியாசமாக இருக்க இது பராமரிக்காது விட்ட தீம் பார்க் என்று நினைகிறார்கள் பெற்றோர்கள்  .
யாருமில்லாத தெருவில் ஹோட்டல்கள் இருக்க அதிலிருந்த உணவை எடுத்து யாரும் வந்து கேட்டால் பணம் கொடுத்துவிடலாம் என்றுகூறி உண்ணத் தொடங்குகிறார்கள் அம்மாவும் அப்பாவும் . சிகிரோ மட்டும் சாப்பிடாமல் அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்து செல்கிறாள் .

 

 

சுற்றி பார்த்துக் கொண்டு செல்கையில் அங்கு ஒரு சிறுவன் வருகிறான் .உனக்கு இங்கு அனுமதியில்லை ,இருட்ட முன்னர் இங்கிருந்து சென்றுவிடு என்று எச்சரிக்கிறான் . சிகிரோ படியிறங்க முன்னரே இருட்ட தொடங்க தெருவில் கரிய உருவங்கள் நடமாடத் தொடங்குகின்றன . சிகிரோ ஹோட்டலுக்கு வந்தால் பெற்றோர்கள் இருவரும் பன்றிகளாக மாறியிருப்பதை பார்த்து அதிர்கிறாள் .
ஒரு கை வந்து அந்த பன்றிகளை சவுக்கால் அடிக்கிறது . சிறிது தூரம் சென்றால் அந்த இடமே கடல் போல நீர் நிரம்பியிருகிறது .இது கனவு என்று கூறி தன்னை தானே அடித்து விழித்தெழ சொல்கிறாள் , ஒரு கட்டத்தில் இது எல்லாமே நிஜம் தான் என்பதை உணர்ந்து அழுகிறாள . அங்கு ஒரு கப்பல் வருகிறது .அதிலிருந்து வினோத உருவங்கள் வர சிகிரோ ஓடி ஒளிகிறாள்.

 

முன்னர் சந்தித்த சிறுவன் மறுபடியும் சிகிரோவை சந்திக்கிறான் .
மனித தலையுடன் கூடிய ஒரு பறவை உன்னை உண்பதற்கு தேடுகிறது இங்கிருக்க வேண்டாம் என்று அழைத்து செல்கிறான் கப்பலில் இருந்து வந்த வினோத உருவங்களில் ஒன்று சிகிரோவை கண்டுவிட சிறுவன் சிகிரோவை காப்பாற்றி  இழுத்து சென்று ”உன் பெற்றோர்களை காப்பாற்ற வேண்டுமானால் கமாஜியிடம்
சென்று வேலை கேள்; நீ வேலை செய்யாவிட்டால் இந்த உலகத்தை ஆளும் சூன்யகாரி யபாபாஉன்னை கொன்றுவிடுவாள்” என்று அறிவுறுத்துகிறான் 4 கைகள் உடைய கமாஜியிடம் சிறுவன் ஹக்கு அனுப்பியதாக கூறி வேலைகேட்கிறாள் சிகிரோ .
அவர் அமைதியாக இருக்க அங்கு ஒரு பெண் வருகிறாள் அவளிடம் சிகிரோவை தனது பேத்தி என்றும் யபாபாவிடம் அழைத்து செல்லுமாறும் கூறுகிறார் .

 

யபாபாவின் அரண்மனை மிக வித்தியாசமாகவும் அதிசயங்களின் கிடங்காகவும் காணப்படுகிறது , சின்ன பயத்துடன் யபாபாவை சந்திக்கிறாள் சிகிரோ
”இது மனிதர்களுக்கான இடமல்ல;இது ஒரு குளியல் இல்லம் 8 லட்சம் கடவுள்களும் இங்குவந்துதான் தங்களது களைப்பை போக்கி கொள்கிறார்கள் உன் பெறோர்கள் அவர்களது உணவை உண்டதால் இனி உங்களது உலகத்துக்கு செல்லமுடியாது .
உனக்கான ஒப்பந்தத்தை நீ மீறினால் உன்னையும் பன்றியாக மாற்றிவிடுவேன் ” என்று கூறுகிறாள் சிகிரோ வேலை ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டதும் அவளது பெயர்கள காற்றில் மேலெழ அதை கைபற்றுகிறாள் யபாபா .
”இந்த நிமிடத்திலிருந்து உன் பெயர் சென்” என்கிறாள். அந்த மாய உலகத்தின் புதிய வேலைக்கரியான சிகிரோவை ஹக்கு அழைத்து செல்கிறான்  பெற்றோரிடம் அழைத்துசெல்லும் ஹக்கு அவர்களுக்கு மனிதர்களாக இருந்த நினைவே இல்லை என்று கூறி சிகிரோ என்ற பெயர் எழுதிய சிறு அட்டையை அவளிடம் கொடுக்கிறான்.அதை பார்த்ததும் சிகிரோவுக்கு தனது பெயர் ஞாபகம் வருகிறது .

 

”யபாபா பெயர்களை திருடி அதன் மூலமே ஆட்சி செய்கிறாள் உன் நிஜ பெயரை ரகசியமாக வைத்துக்கொள் .உன் பெயர் மறந்தால் வீட்டுக்கான பாதையை கண்டு பிடிக்கமுடியாது .நானும் அப்படிதான் மறந்து விட்டேன் ”என்று  சிகிரோவிடம் ஆறுதலாக பேசிவிட்டு டிராகனாக மாறி வானத்தில் பறந்து செல்கிறான் ஹக்கு .

 

வேலைக்காரியாக மாறிய சிகிரோ மிகவும் கஷ்டமான வேலைகளை
செய்கிறாள் .அடிக்கடி அவளை ஒரு ஆவி பின்தொடர்கிறது .அந்த ஆவி சிகிரோவிடம் அன்பு பாராட்டுகிறது .

 

ஒருநாள்-
அந்த நகரத்துக்கு ஆபத்தான துர்நாற்றம் வீசும் சாக்கடை ஆவி வருகிறது .
யாரும் சுத்தபடுத்த முன்வராத நிலையில் அந்த பொறுப்பு சிகிரோவுக்கு தரப்படுகிறது . வேறு வழியில்லாத சிகிரோவும் சம்மதிக்கிறாள் .
முதலில் தடுமாறினாலும் பின்னர் சமாளித்துக் கொண்டு சுத்தப்படுத்த ஆரம்பிக்கிறாள் சிகிரோ . அதனுடைய காயத்தையும் வலியையும் நீக்கி உதவி செய்கிறாள் .தன்னை சுத்தப்படுத்தியதற்கு நன்றி கூறிய ஆவி நிறைய தங்கத்தையும் சிகிரோவுக்கு மிகவும் கசப்பு மிக்க ஒரு உணவுபொருளையும் கொடுத்துவிட்டு சந்தோஷமாக டிராகனாக மாறிச்செல்கிறது. யபாபா முதல் அனைவரும் சிகிரோவை பாராட்டுகிறார்கள்.

 

அடிக்கடி சிகிரோவை பின் தொடரும் ஆவி நிறைய பணம் கொடுத்து தன் பேய் பசியை தீர்க்க சொல்ல அதற்கு எல்லோரும் போட்டி போடுகிறார்கள்
நிறைய தங்கத்தை சிகிரோவுக்கு அந்த ஆவி வலிய வந்து தர அதை ஏற்க மறுக்கிறாள் .ஆனால் மற்றவர்கள் பேராசையுடன் அதை எடுக்கிறார்கள் . அதை பார்த்து கோபமுறும் ஆவி அவர்களை எல்லாம் பிடித்து சாப்பிடுகிறது.நிலைமை கட்டுகடங்காமல் போகவே ஆவியை குணப்படுத்த முயல்கிறாள் சிகிரோ .சாக்கடை ஆவி தனக்களித்த கசப்பான உணவுப்பொருளை அதற்கு கொடுக்க ஆவி குணமடைகிறது . சிகிரோவின் செயல்பாடுகளையும் குணங்களையும் பார்த்து மகிழும் யபாபா சிகிரோவின் பெயரை திருப்பி கொடுப்பதோடு பெற்றோர்களையும் பழைய நிலைக்கு மாற்றுகிறது .

 

ஹக்கு உட்பட அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறும்  சிகிரோ,
 பழைய இடத்து வருகிறாள் .அங்கு அவளுடைய பெற்றோர்கள் இருக்க மிகவும் மகிழ்ச்சியடைகிறாள் .அவர்களுக்கு நடந்த ஒன்றுமே நினைவில்லை. சிகிரோவும் அதை உணர்ந்துகொண்டு எதுவும் சொல்லாமல் அவர்களுடன் கிளம்புகிறாள் .திரைப்படம் நிறைவடைகிறது.

 

 

இந்தப் படத்தின் இயக்குனர் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களின் கடவுள் என்று புகழப்படும் ஹயாவோ  மியாசகி (Hayao Miyazaki ) . அகிரா குரேசோவாவின் படங்களை விட இவர் படங்கள் சிறப்பாக்கும் என்று மனதில் ஒரு கேள்வியுடன் இவரது திரைப்பட பட்டியலை நோக்கிய போது ஒரே ஒரு பெயர் என் எண்ணங்களை மாற்றியது  ‘போனியோ ‘ ஒரு தொலைக்காட்சியில் நான் பார்த்த படம் ….அந்த படத்தை பார்க்கையில் மாய உலகத்துக்குள் புகுந்த பரவசம் எனக்கு ஏற்பட்டது .அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு வாரமாக காத்திருந்து சிறு சிறு அங்கமாக பார்த்த படம் அது . அது மியாசகியின் படைப்பு என்று அறிந்த உடனேயே மனம் குதூகலித்தது.  Spirited Away இன்னொரு உலகம்
இன்னொரு அனுபவம்

 

 ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் மியாசகி தன் குடும்பத்துடனும் நண்பர்கள் குடும்பத்துடனும் இருப்பது வழக்கம்.மியாசகி குடும்ப நண்பரின் பத்து வயது மகள் இத்திரைப்படத்தின் கரு உருவாக காரணமாக இருந்தாள். இத்திரைக்கதை எழுத எழுத மிகப் பெரிதாய் வளர்ந்தது. மூன்று மணி நேரங்களுக்கு மேல் அமைந்ததோடு  படத்தின்  பட்ஜெட்டும் அதிகரித்தது . அப்போது தான் பிக்ஸார் நிறுவனத்தின் இயக்குனரும் மியாசகியின் ரசிகருமான    ஜான் மியாசகியை சந்தித்தார் . வால்ட் டிஸ்னி நிறுவனத்தோடு பேசி  Spirited Awayவை ஹாலிவுட்டிலும் திரையிட ஏற்பாடு செய்தார்.

 

2001 ஆம் வருடம் வெளிவந்த Spirited Away, உலகம் முழுக்க வசூலைக் குவித்தது. ஜப்பானிய சினிமா வரலாற்றில் முதன் முறையாக இத்திரைப்படம் 274 மில்லியன் டாலர்களைக் குவித்தது. ஆஸ்கார் உட்பட உலகெங்கும் உள்ள எல்லா அனிமேஷன் விருதுகளையும் வென்றது. இன்று வரை இவர் படங்களில் வரும் அத்தனைக்காட்சிகளையும் சித்திரங்களாக கைகளில் தான் வரைகிறார். கணணியைப் பயன்படுத்துவதே இல்லை .உலக அனிமேஷன் சினிமாவில் கைகளால் வரையும் ஒரே மனிதர் இவர் என்கிறார்கள்.

 

நீதிகதைகளின் ஆடம்பர கற்பனைகள் இவரது படங்கள் எனலாம் …
பேராசையின் விளைவை, அது தரும் சிக்கலை  மிக அழகாக வெளிப்படுத்தும் இத்திரைப்படம்  தன்னலமற்ற செயற் பாடுகளால்,நற்குணங்களால் அனைவரது மனதையும் வெற்றிகொள்கிறாள் சிகிரோ. முற்றிலும் புதிய உலகத்திற்குள் அழைத்து செல்லும் திரைப்படம் இது சிகிரோவை போலவே அந்த உலகத்தில் இருந்து வெளிவந்த பின்னரும் அதன் தாக்கம் மாறாமல் நின்றிருப்போம் .இது தான் படத்தின் வெற்றி . பெற்றோரின்மை ,பணம் ,அதீத கல்வி சுமை ,தொலைந்து போன பாட்டிகள் ,சமுக அழுத்தம் என்று தடுமாறும் நமது இன்றைய குழந்தைகளை , நிஜமான குழந்தைகளின் உலகத்துக்கு  அழைத்து  செல்ல  சண்டைகளால்  போட்டி மனப்பான்மைகளால் கட்டி எழுப்பப்படும் காட்டூன்களையும் வீடியோ விளையாட்டுக்களையும் தவிர்த்து  இந்த படங்களை பாருங்கள் . குழந்தைகாலாக மாறி கனவுலகில் வசிக்க தயாராகுங்கள்