இந்திய மீனவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – இலங்கை கடற்படை குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பு

இலங்கை கடற்படையினரினால் இந்திய மீனவரை இலக்காக கொண்டு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் சிலரை இலக்காக கொண்டு இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறிய வள்ளங்களிலிருந்த கடற்படையினரால் நேற்று(6) இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும் என்று கூறி இலங்கை கடற்படை முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் வடக்கு கடற்பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சக்திவாய்ந்த வேகத்தாக்குதல் வள்ளம் மற்றும் வேகத்தாக்குதல் காவல்ரோந்து வள்ளங்கள் பயன்படுத்தப்படுவதுடன் எந்த சந்தர்ப்பத்திலும் கடற்படை பாதுகாப்பு ரோந்துக்காக சிறிய வள்ளங்கள் பயன்படுத்தி ரோந்து மேற்கொள்ளப்படுவதில்லை.

இதேபோன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடற்படை தளபதியின் முழுமையான அனுமதியின்றி கடற்படை வள்ளங்களில் கடமையில் ஈடுபடும் நபர்கள் வேறு வள்ளங்களில் அல்லது நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.

பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வள்ளங்களுக்கு இலங்கை கடற்பிரதேசங்களில் தேவையற்றவிதத்தில் மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபடும் ரோலர் வள்ளங்களை கைப்பற்றுவதற்கு தெளிவான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன். இதன்போது கைதுசெய்யப்படுபவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் வள்ளங்களை சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவது வழமையான நடைமுறை ஆகும்.

இதுவரையில் 146 இந்திய ரோலர் வள்ளங்கள் மற்றும் 85 மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமை குறித்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் சட்டநடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதம் 11ம் மற்றும் 12ம் ஆகிய இரண்டு தினங்களில் நடைபெறவுள்ள கச்சதீவு தேவாலய திருவிழாவிற்கு ஏற்பாடுகளை கடற்படை மேற்கொண்டுவருவதுடன் கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கச்சதீவு தீவிற்கருகாமையிலுள்ள கடற்பிரதேசத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வெளியாகும் செய்திகளுக்கு அமைவாக 5000 இந்திய மீனவர்கள் இம்முறை கச்சதீவு தேவாலய திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளதுடன் 150 வள்ளங்கள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இருப்பினும் துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதன் காரணமாக இலங்கை கடற்படை இதன் உண்மை நிலையை உறுதிசெய்வதுடன் உண்மைக்கு புறம்பான விடயங்களை கண்டறிவதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.