‘சைட்டத்துக்கு தீர்வு காண்பேன்’ – ஜனாதிபதி – SAITAM Issue

மாலபேயிலுள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகம் (சைட்டம்) SAITAM Issue தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.Maithripala Sirisena SAITM ISSUE

“இதேவேளை, சைட்டம் நிறுவனத்தால் வைத்திய பீட மாணவர்கள் எவருக்கும் அநீதி இழைக்கப்பட இடமளிக்கப்பட மாட்டாது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அக்கரபத்தனை- ஊட்டுவள்ளி பெங்கட்டன் பிரிவில், நேற்று (09) இடம்பெற்ற வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி காரணமாக பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது.

ஜனாதிபதி என்ற வகையில் தான் எந்தவொரு தரப்புக்கும் சார்பாக இந்த பிரச்சினையில் இருக்கப்போவதில்லை.

இவ்விடயத்தில் பக்கச்சார்பின்றி, நடுநிலையாக செயற்பட்டு நியாயத்தை நிறைவேற்றுவேன். இவ்விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான திட்டமொன்றைத் முன்வைத்து, பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ஆகையால், வகுப்பு புறக்கணிப்புக்களில் ஈடுபடாமல் கல்விச் செயற்பாடுகளை தொடருமாறு அனைத்து மருத்துவ பீட மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, கூறினார்.