மீண்டும்
அடுத்த

சைய்யித் ஜமாலி

முஸ்லிம்கள் அதிகமதிகம் எதிர்பார்க்கக்கூடிய ரமழான் நம்மை வந்தடைந்து இருக்கிறது. முஸ்லிம்கள் அனைவரையும் இந்த மாதத்தில் ஆன்மீகத்தில் மிக ஈடுபாடு உடையவர்களாக நம்மால் காணமுடியும். தள்ளாத வயதிலும் கூட நோன்பு வைப்பவர்கள், பசி பொறுக்க முடியாத பச்சிளம் குழந்தைகள், இப்படி முஸ்லிம்களில் அனைத்து சாராருமே நோன்பு நாள்களில் மிகுந்த ஆன்மீக ஈடுபாட்டில் உள்ளதை நாம் காணமுடியும்.

ரமழான் மாதத்தின் பகல் நேரத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் நோன்பு நோற்க முடியாத நிலையிலுள்ள தள்ளாத வயதினரும் கூட பலபேர் பார்க்கஉண்ண பருக மாட்டார்கள். வெறும் நோன்பு விஷயத்தில் மாத்திரமல்ல மற்ற ஏனைய விஷயங்களிலும் மிகுந்த பேணிப்புடன் நடந்துகொள்வதையும் தீமைகளின் பக்கம் மக்கள் அதிகம் செல்லாதிருப்பதையும் நாம் ரமழான் காலங்களில் பார்க்க முடியும்.

இவ்வாறு பக்திமான்களாக காணப்படும் முஸ்லிம்கள் ரமழான் அல்லாத காலங்களில் ஏன் நற்செயல்களில் அதிகம் ஈடுபடுவதில்லை? இன்னும் சில இடங்களில் சில சகோதரர்களால் ‘ரமழான் முழுவதும் பள்ளியில் காணப்பட்ட முஸ்லிம்களை காணவில்லை! காணவில்லை!! என சுவர் விளம்பரம் செய்யுமளவிற்கு நம்மவர்கள் அப்படியே முழுமையாக மாறிப்போய் விடுகிறார்கள். ஒரு மாதம் தீமைகளின் பக்கம் கவனம் செலுத்தாதவர்கள் அடுத்த மாதம் அல்ல பெரு நாளிலேயே வேறு நபர்களாய் மாறிப்போய்விடுகிறார்கள். ரமழான் முழுவதும் நோன்பு நோற்று தொழுது வந்தவர்கள் பெருநாளன்று தனது மாற்றுமத நண்பர்களுக்கு விருந்தளிக்கிறோம் என்ற பெயரில் மது அருந்துவதையும் இன்னும் பல தீமையான காரியங்களில் ஈடுபடுவதையும் நம்மால் காணமுடியும்.

எனது சொந்த ஊரில் ஈத் தொழுகை முடிந்த பிறகு இளைஞர்கள் குத்பா மிம்பர் படியின் பின்புறம் கோலிக்குண்டு என்றழைக்கப்படும் விளையாட்டில் பணம் கட்டி அதிமும்முரமாக சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் பெருநாளைக்கு அணிந்த ஆடைகூட கறைபடிந்திருக்காது. ஆனால் அவர்களின் உள்ளம் அத்தனை கறைபடிந்து போயிருக்கும்.

இதற்கும் அவர்கள் சதாரான இளைஞர்களா! ரமழான் முழுவதும் நல்லறங்களில் ஈடுபட்டவர்கள் மாத்திரமல்ல. மக்களிடம் வசூலித்து சஹர் நேரத்தில் நோன்பு நோற்க எழுப்புவதற்காக ஒலிபெருக்கிகள் அமைத்து மார்க்க விஷயங்களை ஒலிபரப்பி மக்களை நன்மையின்பால் தூண்டியவர்கள் அவர்கள்.

இந்நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் நமக்கு ஒரு விஷயம் நன்றாகவே புலப்படும். அது என்னவென்றால் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ரமழானின் நோக்கத்தை சரிவர உணராததால்தான் இப்படிப்பட்ட நிலையிலுள்ளார்கள். பலர் ரமழானின் நோக்கத்தை தவறாகவும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவே ரமழானின் நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டாக வேண்டும். ரமழானில் நோன்பும் இன்னும் பிற நல்லறங்களும் கடமையாக்கப்பட்ட நோக்கத்தை சரிவர புரிந்துகொண்டோமேயானால் வருங்காலங்களில் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள உறுதுணையாக அமைவதோடு மிகப்பெரிய நன்மையாகவும் இருக்கும். தற்போது நாம் நோன்பைப்பற்றியுள்ள மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்தில் கொண்டு அவைகளின் நிலை பற்றி சிறிது ஆராய்வோம்.

மீண்டும்
அடுத்த