புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – அவுஸ்ரேலிய பிரதமர்

இந்து சமுத்திரத்தின் பொருளாதார மற்றும் நிதி கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கும் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்று அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் கூறியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை – நல்லிணக்கம் என்பனவற்றை கட்டியெழுப்புவதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள புதிய நடைமுறைக்கு அவுஸ்ரேலிய பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவை சந்தித்த போதே அவுஸ்ரேலிய பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினருக்கு அவுஸ்ரேலிய பாராளுமன்றத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கைக்குத் தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் முன்னிற்க அவுஸ்ரேலியா தயார் என்று குறிப்பிட்ட அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல், சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், புதிய ஆரம்பத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில் , இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளுக்கு 100 வருடங்களைத் தாண்டிய வரலாறுகள் உண்டு என்றார்.

விவசாயம், வலுசக்தி, அகழ்வு, சுற்றுலா போன்ற துறைகளில் முதலீட்டு வாய்ப்புக்களை விஸ்தரிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்படும். துரித அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அவஸ்திரேலியாவிடமிருந்து வலுசக்தி ரீதியான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

பிராந்திய வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தவும், பொதுநலவாய அமைப்பின் பிரகடனத்திற்கு அமைய, வர்த்தக – முதலீட்டு வாய்ப்புக்களையும் விஸ்தரிக்க முடியும். ஆட்கடத்தலை தடுக்க இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் இதன் போது பாராட்டி பேசினார்.

சமுத்திரப் பாதுகாப்பு பற்றி எடுக்கப்பட வேண்டிய ஒன்றிணைந்த நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பாராளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்ட பணியகத்தை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியா உதவும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவுஸ்ரேலியாவின் அமைச்சர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.