நாடாளுமன்றத்துள் சீனக் கணினிகள் : எம்.பிக்கள் அனைவருக்கும் இணைய வசதியுடன் பயன்படுத்த ஏற்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சபைக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதத்துக்குரிய இறுதிவார நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதன்போது சபைக்குள் உள்ள உறுப்பினர்களின் மேசைகளில் மடிக்கணினிகள் பொருத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள கணினிகள் கடந்த 31 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் உரிய ஏற்பாடுகளின் பின்னரே அவை அவைக்குள் பொருத்தப்பட்டு நேற்று முதல் பாவனைக்கு விடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டு முன்னேற்ற அறிக்கைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை இறுவெட்டாகவே வழங்கப்படுகின்றன. அதை உடன் பார்க்ககூடிய வசதி இருக்கவில்லை.

எனினும், கணினிகள் பொருத்தப்பட்டுள்ளதால் அதனை சபையில் இருந்தவாறே அவர்களால் பார்க்ககூடியதாக இருந்தது. அத்துடன், விவாதத்துக்கு தேவையான தரவுகளையும் உடனுக்குடன் தேடுவதற்குரிய வசதியும் கிடைத்துள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளின்போது, உறுப்பினர்கள் நீண்ட நேரம் சபையில் அமர்ந்திருப்பதற்கும் இந்தத் திட்டம் உதவியாக இருக்குமென நம்பப்படுகின்றது.

கணினிகளை வழங்கிய சீன அரசுக்கு சபாநாயகர் நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]