பள்ளிவாசல்களில் இசைக்கப்படும் அதிகரித்த ஒலியால் பரீட்சை எழுதும் மாணவர்கள் அசௌகரியம்

mosque-speaker

தற்போது சில பள்ளிவாசல்களில் மாலை வேளையில் பல வகையான சினிமாப் பாடல் மெட்டுக்களில் இசைக்கப்படும் அதிகரித்த ஒலியால் அப்பள்ளிவாசல்களுக்கு அருகிலுள்ளவர்கள் குறிப்பாக மாணவர்கள் கடும் அசௌகரியத்துக்கு உள்ளாகி வருவதாகத் தெரியவருகின்றது.

இது அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான வருட இறுதித் தவணைப் பரீட்சைக் காலமாக இருக்கின்ற அதேவேளை, இன்னும் சில தினங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான தேர்வும் நெருங்கிக் கொண்டிருக்கும் முக்கிய காலகட்டமாகவும் உள்ளது.

எனினும், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது மாணவர்கள் தமது பரீட்சைக்குத் தயார்படுத்த வேண்டிய அமைதியான மாலை மற்றும் கருக்கல், இரவு நேரங்களில் சினிமாப் பாடல் மெட்டுக்களில் அதிகரித்த கோரஸ் ஒலியில் கூட்டாக இசைப்பது அருகிலுள்ள அனைவருக்கும் அசௌகரியத்தை தோற்றுவித்துள்ளது.

மாணவர்கள், நோயாளிகள், வயோதிபர்கள், மற்றும் குழந்தைகளும்இந்தவித சகிக்க முடியாத இசை எழுப்பலால் சங்கடப்படுகின்றார்கள்.

இது ஒரு புறமிருக்க சில பள்ளிவாசல்கள் பிற சமூகத்தாரின் குடியிருப்புக்கள் மற்றும் கோயில், பன்சல போன்றவற்றிற்கு அருகில் அமைந்திருப்பதால் தேவையற்ற ஆத்திரமூட்டல்கள் இடம்பெற வாய்ப்புண்டு.

சமகால நாட்டு நடப்புக்கள் ஒரு சிறு பொறியில் தீப்பற்றக் கூடிய இனவாத நெருக்கடியில் இருந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய கடமைப் பொறுப்பு உள்ளது.

குறிப்பாக ஏறாவூரில் சிங்களவர்களை அதிகமாகக் கொண்ட பொலிஸ் நிலையம், அவர்களது தங்கும் விடுதி, பன்சல, இந்துக்களின் குடியிருப்புக்கள், அவர்களது கோயில்கள், பாடசாலைகள், கடைத் தெரு, பொதுச் சந்தை ஆகியவை அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல்களிலிருந்து மாலை நேரத்தில் எழுப்பப்படும் சினிமாப் பாடல் மெட்டுக்களில் அமைந்த கோரஸ் இசைகள் பெருத்த அசௌகரியத்தைத் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சமகால நாட்டு நடப்புக்களை நன்கு உணர்ந்தவர்களாக முஸ்லிம்கள் அறிவார்ந்த ரீதியில் தமது மார்க்க மற்றும் வாழ்வியல் முறைகளை கட்டுக்கோப்புடன் முன்மாதிரியாக வகுத்துக் கொள்வது சிறந்தது என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வருமுன் காப்பதே அறிவுடமை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.