நீதித்துறை செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருக்கவேண்டும் – ஜனாதிபதி

நீதித்துறை செயற்பாடுகள் மிகவும் தூய்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இடம்பெறவேண்டும் என்பதே தனது அன்றைய, இன்றைய, நாளைய நிலைப்பாடாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று பிற்பகல் நடைபெற்ற 2017 தேசிய சட்ட சம்மேளனத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நீதித்துறைக்குரிய நியமனங்களை மேற்கொள்ளும்போது தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட விருப்பத்தக்கமைய தீர்மானமெதுவும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அண்மையில் இணையதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களாலும் சில நீதித்துறை நிறுவனங்களாலும் குற்றம் சாட்டப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் நியமனம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வேண்டுகோளுக்கமையவே மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.

நீதித்துறையின் பிரதான நிறுவனங்களின் அவதானிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டே குறித்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சமூகத்தில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுபவராகவும் 19வது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களின் ஒரு பகுதியை பாராளுமன்றத்திற்கும், ஏனைய சுயாதீன நிறுவனங்களுக்கும் ஒப்படைத்த ஜனாதிபதி என்ற வகையில் தற்போதுள்ள அதிகாரங்களை பயன்படுத்தும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தீர்மானங்களை எடுக்க தயாரில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து துறைகளிலும் தீர்மானங்கள் எடுக்கும் போது அந்த துறைகளிலுள்ள நிபுணர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாடியே தீர்மானங்கள் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற கட்டமைப்பில் மக்கள் எதிர்பார்க்கும் நோக்கங்களை அடையும்போது பெரும்பாலானவை விவாதங்களுடன் நின்றுவிடுவதாகவும், அதற்கான தீர்வுகள் கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, வழக்குகள் தாமதமடைதல் போன்ற பிரச்சசினைகளைத் தீர்ப்பதற்கு நீதித்துறையிலுள்ள அனைவரும் கூட்டாக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஆகியோர் உள்ளிட்ட நீதித்துறை நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.