இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள் தான் ஏழைகள்:முன்னாள் உருகுவே ஜனாதிபதி

உருகுவே மக்களின் கனவான் ஜோஸ் முஜிகாவின் சில துளிகள் உருகுவே மக்களின் கனவான். 

சில சுவாரஸ்யமான தகவல்கள்

பதவிக் காலத்தில் மிக எளிமையாக வாழ்ந்த உலகின் ஏழை ஜனாதிபதியை பணி ஓய்வின்போது உருகுவே நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், நெகிழ்சியுடனும் வழியனுப்பி வைத்த ஜோஸ் முஜிகா பற்றி இன்றும் அந்நாட்டில் பேச்சுகள் அடிப்பட்ட வண்ணம்தான் உள்ளன.

ஜனாதிபதி என்றாலே… நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்ந்தார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.

அந்த இன்ப அதிர்ச்சியை தருபவர், உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா. ஜனாதிபதிக்கு அரசு வழங்கும் ஆடம்பர மாளிகையை புறக்கணித்துவிட்டு, புழுதி படிந்த சாலையோரம் உள்ள தனது மனைவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இவர் வாழ்ந்து வருகின்றார்.

இவரது வீட்டுக்கு இரண்டே இரண்டு பொலிஸார் தான் காவல் காக்கின்றனர். வீட்டுக்கு பின்புறம் உள்ள பண்ணையில் மனைவியுடன் சேர்ந்து இவர் மலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார். மாதாந்த சம்பளத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு, உருகுவே குடிமகனின் சராசரி சம்பளமான 775 அமெரிக்க டாலர்களை வைத்தே தனது குடும்ப செலவினங்களை ஜோஸ் முஜிகா சமாளித்து வருகின்றார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தனது சொத்து கணக்கை சமர்ப்பித்த இவர், 1987ஆம் ஆண்டில் வாங்கிய “வோக்ஸ் வேகன் பீட்டில்’ காரை மட்டுமே தனது சொத்தாக காட்டியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 1800 அமெரிக்க டாலர்கள்.

2009ஆம் ஆண்டு உருகுவே நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஸ் முஜிகா, 1960-70களில் உருகுவே கொரில்லா புரட்சி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1971ஆம் ஆண்டு முதல் 1985 வரை பலமுறை தனிமைச்சிறை உள்பட அடக்குமுறை சட்டங்களின் மூலம் பல்வேறு கடுமையான தண்டனைகளை இவர் அனுபவித்துள்ளார்.

சிறை வாழ்க்கைதான், தன்னை பக்குவப்படுத்தியது என்னும் ஜோஸ் முஜிகா, சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னைப் பற்றி கூறியதாவது:

விசித்திரமான முதியவராக நான் தோன்றலாம். ஆனால், இது எனது விருப்பமான தேர்வு. இதேபோல் தான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை நான் கழித்துள்ளேன். இருப்பதைக் கொண்டு என்னால் சிறப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மிகவும் ஏழை ஜனாதிபதி என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை நான் ஏழை அல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இன்னும் இன்னும் வேண்டும் என்று அலைகின்றவர்கள் தான் ஏழைகள் எனக் கூறியிருந்தார்.

கடந்த 1.3.2015 தனது பதவிக் காலத்தை நிறைவுசெய்த ஜோஸ் முஜிகா, தனது அலுவலகமான ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறி சொந்த வீட்டுக்கு திரும்பியபோது ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

எனது பயணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு வெகு நெருக்கமாக நான் சென்று கொண்டிருக்கிறேன். வயதான ஓய்வூதியதாரராக ஒரு மூலையில் அமர்ந்து எனது பதவிக்கால அனுபவங்களைப் பற்றி புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்க விரும்பவில்லை. எனக்கு அசதியாகதான் உள்ளது. எனினும், நான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்று கூறினார்.

உருகுவே நாட்டின் சட்டத்தின்படி, இரண்டாவது முறையாக யாரும் ஜனாதிபதியாக முடியாது. தற்போது 81 வயது முதியவராக உள்ள ஜோஸ் முஜிகா, தனது ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு நிம்மதியாக காலம் கழித்து வருகிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]