வலுக்கிறது வரலாறு காணாத எதிர்ப்பு, வெற்றி காணுமா நல்லாட்சி?

சைட்டம் விவகாரத்தில் ஆரம்பித்து குப்பை பிரச்சினைவரை இன்று நல்லாட்சி அரசுக்கு எதை தொட்டாலும் பிரச்சினையாகவே உள்ளது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் பல்வேறு அரசுகள் இலங்கையை ஆட்சிசெய்துள்ளன. ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் போன்று எந்தவொரு அரசுக்கு எதிராகவும் இலங்கையில் ஏற்படவில்லை என்பது கோடிட்டுக்காட்டப்படவேண்டிய விடயமாகும். அரசுக்கு எதிராக

1956ஆம் ஆண்டு எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவால் தனிச்சிங்கள சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுமுதல் இலங்கையில் மொழிப் பிரச்சினை, பெரும்பான்மைவாத, சிறுபான்மைவாத, அடிப்படைவாத மற்றும் உரிமை  சார்ந்த பிரச்சினைகளாகவே காலங்கள் கடந்துவந்தன.

1978ஆம் ஆண்டு சிறுபான்மைச் சமூகங்கங்களின் ஆதரவின்றி கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கு எதிராகக்கூட இடம்பெறாத  போராட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்றைய நல்லாட்சி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றன.

அரசுக்கு எதிராக

2015ஆம் ஆண்டுக்கு முன்னர்  அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித  உரிமைகளை நிலைநாட்டுதல், நல்லிணக்கம் சமாதானம் போன்ற விடயங்களே இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பெரும்பாலும் பேசுபொருளாக இருந்தது. ஆனால், ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசு ஜெனிவா விவகாரத்தை சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர அணுகுமுறைகள் மூலம் குறிப்பிட்டளவு வெற்றிகொண்டமையால் ஜெனிவா விவகாரம் என்பது என்று இலங்கை அரசுக்கு ஒரு சாதாரண விவகாரம் போன்றே உள்ளது.

அதற்கு மாறாக உள்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று அரசு முகங்கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் அரசுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளமையே நிதர்சனம்.

சைட்டம் விவகாரமே இந்த அரசுக்கு எதிராக எழுந்த முதலாவது பாரிய பிரச்சினை. மாலபே தனிõர் மருத்துவக் கல்லூரி எனப்படும் சைட்டம் கல்லூரிக்கு முன்னாள் அரசே அங்கீகாரம் வழங்கியிருந்தது. சைட்டம் கல்லூரி உருவாக்கப்படும்போது கல்லூரியில் வைத்தியக்  கல்வியை பயிலும் மாணவர்கள் இறுதியாக ரஷ்யாவில் சென்று கல்வி கற்றே வைத்திய பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.

என்றாலும் 2014ஆம் ஆண்டு அக்கல்லூரியில் நான்காவது கட்டமாக பயிலும் மாணவர்கள் தொடக்கம் அடுத்துவரும் அனைவரும் இலங்கையிலேயே பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சைட்டம் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டதால் அரசு அதற்கு அங்கீகாரம் அளித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நீண்டகாலமாக மௌனத்தையே காத்துவந்தது. தனியார் மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்த அன்று  மஹிந்த அரசு வெளிப்படையாக மேற்கொண்ட நடவடிக்கைக்கு வைத்தியர் சங்கம் எவ்வித எதிர்ப்பை தெரிவித்திருக்கவில்லை. கடந்த வருடமே இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சிலரே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமைத்துவத்தில் இருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது. 

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து விடைபெறும் முகமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு சென்றார். ஆனால், இன்று மஹிந்தவுடன் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவாகச் செயற்பட்ட குழுவின் அதாவது, கூட்டு எதிரணி என்று கூறிக்கொள்பவர்கள் மீண்டும் தமது சுயநல அரசியலுக்காக மஹிந்தவை பொறியாக்கினர்.  அதன் பின்னர் அரசுக்கு எதிராக பல்வேறு காய்நகர்த்தல்களை மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.

குறிப்பாக, வடமத்திய மாகாண சபையையே அண்மையில் ஆட்டங்காண வைத்திருந்தார். இவரின் காய்நகர்த்தல்களின் ஒரு விஸ்வரூபமாகவே இன்று அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுதவிர, மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அவர்களால் பொறுப்பற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், செயற்பாடுகள் மற்றும் வினைதிறனற்ற பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் தற்போதைய அரசே முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சைட்டம் விவகாரத்தை அரசு நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கும் என்று ஜனாதிபதி அண்மையில் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தார். ஆனால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு இணங்காது தொடர்ச்சியாக நாங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுவோம் என்று கூறிவருகின்றது. இந்நிலையில், தபால் ஊழியர்கள், ரயில் ஊழியர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பும் அரசுக்கு எதிராக அற்பசொற்ப காரணங்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. 

இந்தப் போராட்டங்கள் இவ்வாறு தொடர, அண்மையில் ஏற்பட்ட மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம் காரணமாக தலைநகர் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றி கொண்டுவருவதற்கு இடமின்றி அரசு அல்லோலகல்லோலப்பட்டு வருகின்றது. கொழும்பில் வகைப்படுத்தப்பட்ட விதத்தில் குப்பைகள் சேகரிக்கப்படாமையால் கொழும்புக்கு அண்டிய இடங்களில் எங்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசுக்கு இடமில்லை என்பதுடன், தனியாரும் காணிகளை  வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவது தொடர்பில் அண்மையில் அமைச்சரவையில் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், அதற்கு நான் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டேன் என்று மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் நிராகரித்திருந்தார். குப்பைகள் அகற்றப்பாடாத நிலையில் மேல்மாகாணத்தில் டெங்கு நோய் தலைவிரித்தாடுகிறது.

இதுவரை 170இற்கும் அதிகமானோர் டெங்குநோயால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. டெங்குநோய் தாக்கம் அதிகரித்துள்ள சூழலிலேயே சைட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது இந்தப் பிரச்சினைகளுடன், கடந்த அரசால் அனுமதியளிக்கப்பட்டிருந்த உமாஓயா திட்டத்திற்கு எதிராக ஊவாவில் புரட்சி வெடித்துள்ளது. மக்கள் அனைவரும் உமாஓயா திட்டத்திற்கு எதிராக பாதையில் இறங்கியுள்ளனர்.

உமாஓயா திட்டத்தால் நான்காயிரத்துக்கு அதிகமான வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், விவசாய நிலங்களிலும் கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளது. இதனால் மக்கள் குடிதண்ணீர்கூட இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை தவிர வடக்கு  மற்றும் வடமேல், வடமத்திய மாகாணங்களில் தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. இதுவரை குறித்த மாகாணங்களில் வறட்சியால்  ஐந்து இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டில் நெல் உற்பத்தியில் குறித்த மூன்று மாகாணங்களே முன்னிலையில் உள்ளன. ஆனால், இம்முறை இங்கு சிறுபோக பெரும்போக உற்பத்தியை மேற்கொள்ள காலநிலை கைக்கொடுக்காததால் அரசுக்கு அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக 10ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியை பாகிஸ்தானிடமிருந்து அரசு இறக்குமதி செய்திருந்தது. தற்போது இம்மாதமளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் 10ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியை அரசு இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டில் இவ்வாறு அரசுக்கு எதிராக அழுத்தங்களும், போராட்டங்களும் அதிகரித்துள்ள சூழலில் சர்வதேச மட்டத்திலும் அரசு பல்வேறு விவகாரங்களுக்கு முகங்கொடுத்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய இக்காட்டான நிலையிலேயே உள்ளது. 

உள்நாட்டில் உற்பத்தியின்மை, கடந்த அரசின் காலத்தில் கையாளப்பட்ட வினைத்திறனற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் பொருளாதாரம் பெரிதும் பின்னடைவை சந்தித்திருந்தது. ஐரோப்பிய சந்தைகளை எமது உற்பத்திகளை ஏற்றுமதிசெய்ய வழங்கப்படும் ஏற்றுமதித் தீர்வையான ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனமையால் அந்நிய வருமானம் பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்குக் கிடைக்காமல் போனமையால் நேரடியாக  நான்கு இலட்சம் பேருக்கும் மறைமுகமாக 10இலட்சம் பேருக்கும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் போனது. அத்துடன், எண்ணற்ற ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டன. குறிப்பாக, இலங்கையின் ஆடை உற்பத்திக்கு ஐரோப்பிய சந்தைகளில் அன்று நல்ல வாய்ப்பு காணப்பட்டது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இல்லாமல் செய்யப்பட்டதால் இன்று அதன் பயனை பங்களாதேஷ மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அனுபவித்துவருகின்றன.

பொருளாதாரத்தை முற்றாக மறுசீரமைக்கவேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்ற நிலையில், அதற்கான நிதியை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் சர்வதேச வங்கிகளில் மற்றும் சர்வதேச மானியங்கள் என்ற அடிப்படையில்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.  சர்வதேச ரீதியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் உள்நாட்டில் அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவான காரணிகள் காணப்பட வேண்டும். குறிப்பாக, இலங்கை என்பது பல்லின மக்களைக்கொண்ட பன்மை கலாசாரத்தை கொண்ட நாடாகும். இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமை நிலவவேண்டும். ஆனால், நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு என்பது இலங்கை  சுதந்திரமடைந்தது முதல் எட்டாக்கனியாகவே உள்ளது. நாட்டில் இனவாதம், பெரும்பான்மை தேசியவாதம், சிங்களமொழிக்கு முன்னுரிமை, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் மூன்று தசாப்தகால யுத்தமொன்றுக்கும் இலங்கை முகங்கொடுக்க நேரிட்டது.

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் இலங்கையில் இன்னமும் நல்லிணக்க ம் ஏற்படவில்லை. அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை. கடந்த அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததால் சர்வதேச ரீதியில் பாரிய சவால்களுக்கும், பொருளாதார தடைகளுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நிலை காணப்பட்டது.

இந்நிலையை உடைத்தெறிந்து இன்று நல்லாட்சி அரசு சர்வதேச நம்பிக்கையை வென்றெடுத்து சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கின்றது. சர்வதேச நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் நல்லிணக்ததை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது. நீண்டகால போராட்டமாக உள்ள அதிகாரப்பகிர்வுக்குத் தீர்வை முன்வைக்கும் முகமாக புதிய அரசமைப்புக்கான பணிகளை அரசு மும்முரமாக முன்னெடுத்து வருகிறது. அரசமைப்புத் தொடர்பிலான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் சமர்ப்பிக்க திட்டமிட்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

பெரும் இக்கட்டான நிலையில் அரசு உள்நாட்டு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிரணியின் செயற்பாடுகளால் இலங்கை மீண்டும் இனவாதத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்கிறது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுபலசேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புகளும் நாட்டில் கலவரங்களைத் தூண்ட காய்களை நகர்த்தி வருகின்றன.

2014ஆம் ஆண்டு அளுத்கமயில் ஏற்பட்ட கலவரம் போன்று மீண்டும் நாட்டில் ஒரு கலவரம் ஏற்பட்டால் இனவாத அமைப்புகள் தலை தூக்கும். அதனை வைத்து எதிர்வரும் தேர்தல்களில் வாக்குவேட்டை நடத்தலாம் என்பது மஹிந்த அணியின் காய்நகர்த்தலாக உள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போதைய நல்லாட்சி அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை என்பது இலங்கை வரலாற்றில் எந்தவொரு அரசுக்கும் ஏற்படாத நிலையே ஆகும். 

இவை அனைத்தையும் சமாளித்து அரசு தற்போது இரண்டரை வருடங்களைக் கடந்துள்ளது. இன்னும் இரண்டு வருடங்களை கடந்தே ஜனாதிபதித் தேர்தல் ஒன்றோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றோ நடத்தவேண்டியுள்ளது. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் ஆயுட்காலம் முடிவடையும். மாகாண சபைகளுக்கான  தேர்தலை நடத்தவேண்டிய இக்கட்டான நிலையில் அரசு உள்ளது.

எனவே, தற்போதைய அரசு அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அரசுக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையிலேயே சிறுபான்மை மக்கள் உள்ளனர். ஆனால், பெரும்பான்மை மக்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அரசு எவ்வாறு ஏற்படுத்த வழிகோலப்போகின்றது என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்கவேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]