கிழக்குப் பல்கலைக் கழகம் இந்தியப் பல்கலைக் கழகங்களோடு துறைசார் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை

Eastern University SriLanka, இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகம் அதன் உலகளாவிய கல்வி நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் பொருட்டு இந்தியாவின் காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ஆகியவற்றுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கைக் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கை தொடர்பாக புதன்கிழமை 06.12.2017 கருத்து வெளியிட்ட அவர், மேற்படி மூன்று இந்திய பல்கலைக் கழகங்களுடனும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கல்வி சார் அலுவலர்களின் உற்பத்தித் திறன் விருத்தி மற்றும் உயர்கல்வி, துறை சார் ஆராய்ச்சிகள், பல்கலைக் கழக மாணவர்களின் பாடவிதான அபிவிருத்தி ஆகியன கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி அபிவிருத்திக்கான அமுலாக்கங்களாக அமையும்.

மேலும், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சர்வதேச மட்டத்திற்கு தமது பட்டமேற்படிப்பை மேற்கொள்வதற்கும், இந்திய இலங்கை மாணவர் கல்வித்துறை ஆராய்ச்சிப் பரிமாற்றம், கலாச்சார, மொழி பொதுமைப்பாடுகளின் துறைசார் நடவடிக்கைகள் மற்றும் உயர் கல்வி ஆராய்ச்சிகள் என்பனவற்றையும் மேற்கொள்ள இந்த உடன்படிக்கை துணைபுரியும்.

அதேவேளை, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தற்போதிருக்கும் கல்வித்துறைகளுக்கு மேலதிகமாக புதிய பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகளும் உள்ளீர்க்கப்படும்.
குறிப்பாக இலங்கை கடலால் சூழப்பட்ட வளங்கொண்ட தீவு என்பதால் கடலக ஆராய்ச்சிக் கல்வி முக்கிய புதிய கல்வித் துறையாகக் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய பல்கலைக் கழகங்கள் இத்துறையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

அதனால் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் இத்துறையில் தமது ஆற்றலை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியில் புகழ்பெற முடியும்.
இந்த உடன்படிக்கைகளின் பிரகாரம் கிழக்குப் பல்கலைக் கழகம் மற்றும் இந்திய பல்கலைக் கழகங்கள் தமது செயற்திட்டங்களை உடனடியாகத் துவங்கவுள்ளன.
இந்த பரஸ்பர கல்வி மேம்பாட்டு உடன்படிக்கையில் இந்தியாவின் காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர், பேராசிரியர் கலாநிதி பி. செல்லத்துரை, அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநிதி எஸ். மணியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநிதி கே. பாஸ்கர் ஆகியோரும் கிழக்குப் பல்கலைக் கழக உப வேந்தர் தங்கமுத்து ஜயசிங்கமும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இலங்கைக் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தற்போது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சுமார் 5400 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்துறை சார்ந்த தமது உயர் கல்விப் படிப்பை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]