கொழும்பு கோட்டைக்கும் மாத்தளைக்குமிடையில் வார இறுதி நாட்களில் அரைசொகுசு கடுகதி ரயில்

ரயில்வே திணைக்களம் வார இறுதி நாட்களில் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தளை வரை அரை சொகுசு ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த ரயில் சேவை வெள்ளிக்கிழமை மாலை சம்பிரதாய பூர்வமாக கொழும்பு கோட்டையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பபித்தது.
இதன் போது இந்த ரயிலில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பயணம் செய்தார். மாத்தளை ரயில் நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

ரயில் சேவையை சிறப்பாக முன்னெடுப்பதற்காக இந்தியாவின் நிதியுதவியின் கீழ் 160 ரயில் பெட்டிகளும் 20 ரயில் எஞ்சின்களையும் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

colombo matale train

மலையக ரயில் பாதையில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட ரயில் எஞ்சின் ஒன்றும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ரயில் வாரத்தில் வெள்ளிக்கிழமை நாட்களில் பிற்பகல 2.30ற்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரவு 7.13ற்கு மாத்தளையைச் சென்றடையும்.

கொழும்பிலிருந்து கண்டி வரையில் முக்கிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும். இந்த ரயில் கண்டியைக் கடந்த பின்னர் கட்டுகஸ்தோட்டை உடகந்தவின்ன மத்தேகம உக்குவல ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

ரயிலில் இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு பெட்டிகள் நான்கைக் கொண்டதாக அமைந்திருக்கும். இந்த ரயிலில் 296பேர் பயணிக்க முடியும்.

ரயில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை 6.30ற்கு மாத்தளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். காலை 11.15ற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை வரையில் வார இறுதியில் நேரடி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தளை பிரதேச பயணிகள் பல வருட காலமாக வலியுறுத்திவந்த  கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே இந்த நடவடிக்கையை ரயில்வே திணைக்கனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.