50 வருடங்களின் பின் சரக்கு விமானசேவை

ரத்மலானை விமானநிலையத்தில் சர்வதேச வர்த்தக விமானசேவை பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த சேவை 50 வருடங்களின் பின்னர் மீண்டும் இங்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதுடன் மாலைதீவு சர்வதேச விமானநிறுவனத்தின் டிஎச் 8 ரகத்தை சேர்ந்த 3 விமானங்கள் மாலைதீவிலிருந்து ரத்மலானை வரை நாளாந்தம் சேவைகளை மேற்கொள்ளும். இதேபோன்று ரத்மலானையிலிருந்து மாலைதீவு வரையில் மொத்தமாக 6 விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாக கொண்ட இந்த விமானசேவைகள் குறித்த விசேட பேச்சுவார்த்தை ஒன்று ரத்மலானை விமானநிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கமைவாக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையிலுள்ள மாலைதீவு தூதுவரான சஹியா சாரீர் மாலைதீவு சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அப்துல் ஹரிஸ் , விமான நடவடிக்கையின் தலைமை அதிகாரி அஹமட் இப்ராஹிம், விமான நிலைய நிறுவன தலைவர் சமர் எதிரிவீர, நிறைவேற்று பணிப்பாளர் ஜோஹான் ஜெயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளின் அமைச்சர்களும் இதன்போது நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.