சசிகலா இன்றே சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக வெளியான பரபரப்பு தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்றே சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஸ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதேவேளை, இளவரசி, சுதாகரன் உள்ளி்ட்டவர்களுக்கும் சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் .

இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார்.

அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.