அறம் என்பது என்ன? திருட்டு அறமல்ல; குற்றம் என்பதை அறிவோம் ஆசையின் அடிப்படையில் நடக்கும் திருட்டு –குற்றம்.அவசியத்தின்  அடிப்படையில் நடக்கும் திருட்டு???பல்பொருள் அங்காடிக்கு முன்னால் உணவுப்பொதியை திருடி செல்பவர்களை எந்தஅடிப்படையில் குற்றவாளி என்பது?
நாங்கள் பாதைகளோடு தெரு மனிதர்களையும் கடந்தே போகிறோம்.எங்களது புறக்கணிப்பில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் குற்றசமுகமாக மாறிவருகிறது.
ஒருவனது குற்றசெயலுக்கு பின்னணியில் நம் பெயரும் இருக்கிறது என்பதை கண்ணீரோடு உணர்த்துகிறது Bicycle Thieves 

இரண்டாம் உலகயுத்தகாலம். இத்தாலியில் வேலையில்லாத்திண்டாட்டம் நிலவிவருகிறது .ஒரு இடத்தில் போஸ்டர் ஓட்டும் வேலைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது .தங்கள் பெயர் பட்டியலில் வருமா என்று ஆவலோடு காத்திருகிறது ஒரு பெரிய கூட்டம் . மேலாளர் அந்தோனியோரிச்சியை அழைக்கிறார். அந்தோனியோரிச்சி வேலையற்ற குடும்பஸ்தன் .சந்தோஷத்தில் சென்றால் அந்த வேலைக்கு சொந்தமாக சைக்கிள் இருக்கவேண்டும் என்று மேலாளர் சொல்ல,செய்வதறியாது தவிக்கிறான் அந்தோனியோ. சைக்கிள் இல்லை என்றால் எங்கே வேலை பறிபோய்விடும் என்று அறிந்து சைக்கிளோடு வருவதாக வேலையை ஏற்கின்றான். அந்தோனியோவிற்கு 2 குழந்தைகள் மூத்தவன் 7 வயது மதிக்கத்தக்க புருனோரிச்சி.    2வது கைக்குழந்தை. குடும்பத்தை காப்பாற்ற இந்த வேலை முக்கியம் என்று மனைவியிடம் சொல்ல, வீட்டிலுள்ள போர்வைகளை விற்று சைக்கிள் வாங்க பணம் கொடுக்கிறாள் மனைவி மரியா. புது சைக்கிள் வாங்குகிறார்கள்.சந்தோஷமாக வேலைக்கு செல்லத்தொடங்குகிறான் அந்தோனியோ.இனி கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் ஏற்படுகிறது .

தனியாக ஏணியில்ஏறி  போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறான் அந்தோனியோ . அந்த பக்கம் வரும் திருடன் ஒருவன், அந்த சைக்கிளை திருடிக்கொண்டு செல்ல அவனை துரத்திக்கொண்டே ஓடுகிறான்.ஆனால் அவனால் திருடனை பிடிக்கமுடியவில்லை. போலீசில் புகார் கொடுகிறார்கள். பின்னர் நண்பர்களுடன் சைக்கிள் பாகங்களை விற்கும் பிரதேசத்தில் தேடி அலைகின்றான். ஆனால் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில்நண்பர்களும் சென்று விட, மகன் புருனோவுடன் சைக்கிளைத்தேடி அலைய ஆரம்பிக்கிறான். நீண்ட தேடல் நிலையில்லாமல் செல்கிறது. அந்தோனியோ மனம் முழுவதும் சைக்கிளைமட்டுமே எண்ணி தவிக்கிறது.அப்பாவின் நிலை புரிந்தும் புரியாமலும் அவருடன் செல்கிறான் புருனோ.

ஒரு இடத்தில் சைக்கிளை திருடியவன் ஒரு முதியவரிடம் பேசுவதை காண்கிறான்.திருடனை தேடி ஓடினாலும் அவனை பிடிக்கமுடியவில்லை. என்ன செய்யலாம் என சிந்தித்து அந்த முதியவரை தேடதொடங்குகிறார்கள் இருவரும். முதியவரை ஒருவழியாக பிடித்து விசாரிக்க, முதலில் உண்மையை சொல்ல மறுப்பவர் பின்னர் திருடனை பற்றி சொல்லிவிட்டு தப்பி விடுகிறார்.


திருடனை தேடி செல்கையில் பசியால் புருனோ சூப் கேட்க, தனது வேதனை அறியாது மகன் பேசுகின்றான் என்றெண்ணி கோபத்தில் மகனை அடித்து விடுகிறார்.புருனோ அழ ஆரம்பிக்க பாலத்தின் அடியில் நிற்க சொல்லிவிட்டு தனியே சைக்கிளை தேடி புறப்பட ஆரம்பிக்கிறான் .
திடிரென்று ஆற்றில் சிறுவன் விழுந்து விட்டதாக குரல் கேட்க அதிர்ச்சியுடன் ஓடிசென்று பார்க்க அது புருனோ இல்லை என்று அறிந்ததும் நிம்மதியடைகிறான் .
உடனே மகனை அன்போடு ஒரு உணவு விடுதிக்கு அழைத்து  சென்று அவன் விரும்பியதை வாங்கித் தருகிறான் அந்தோனியோ. சாப்பிட்டு முடிய முதியவர் சொன்ன இடத்திற்கு சென்று திருடனை தேடுகிறார்கள்.ஒருகட்டத்தில் திருடன் மாட்டுகிறான் .
ஆனால் அவன்தான் திருடன் என்பதை ஊராருக்கும் பொலிசுக்கும்உறுதிபடுத்த அந்தோனியால் முடியவில்லை .அவன் அங்கிருந்து சென்றுவிடுகிறான் .

எல்லா முயற்சிகளும் தோற்று, தேடி சலித்த நிலையில் ஏமாற்றதோடும் வேலை பறிபோகுமே என்ற பயத்தோடும் மக்கள் நிறைந்த சாலைக்கு வருகிறார்கள் இருவரும். பிளாட்பாரத்தில் அமர்ந்து யோசிக்கிறான் அந்தோனியோ. அடுத்தடுத்து குழப்பங்கள் அவனை சூழ, ஒரு தெருவில், யாரும் அருகில்லாமல் தனியாக நின்று கொண்டிருக்கும் சைக்கிளை பார்க்கின்றான் . சட்டென்று   புருனோவிடம் பஸ்ஸில் ஏறி போகச் சொல்கிறான். பஸ்ஸில் ஏறப் போகும் புருனோ கூட்டம் காரணமாக ஏற முடியாமல் அங்கேயே நிற்கிறான்  .

சைக்கிள் நிற்கும் இடத்துக்கு போன அந்தோனியோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சைக்கிளை எடுத்து செல்லமுயல உள்ளிருக்கும் நபர்கள் அதைக் கண்டு விட்டு கூச்சல் போட ஆரம்பிக்கின்றார்கள். கூட்டம் நிறைந்த சாலையில் என்பதால்  அவனைப் பலர் துரத்தி பிடித்து விடுகிறார்கள். தூரத்தில் தந்தையை துரத்துவதை கண்டுவிட்ட புருனோ தந்தையை தேடி ஓடி வருகிறான். கூட்டத்தினர் அவனைப் போலீசில் ஒப்படைத்து விடலாம் எனக் கூறுகையில் அங்குவரும் புருனோ செய்வதறியாது தந்தைக்காக அழுகிறான் . புருனோ அழுவதை பார்த்து இரக்கப்பட்ட உரிமையாளன் அந்தோனியோவை
விடச் சொல்கிறார். அந்தோனியோவை எச்சரித்துவிட்டு  கூட்டம் கலைகிறது .

எல்லாரும் அடித்து காயப்படுத்திய நிலையில் ,உடல்வலியை விட வெட்கம்,வேதனை, கண்ணீர், திருடிய குற்றஉணர்வு எல்லாம் இணைந்து அந்தோனியோவின் மனதை அதிகம் வலிக்கச் செய்தது. தந்தையின் வலியையும் வேதனையும் புரிந்து கொண்ட புருனோ,கண்ணீரை துடைத்துக்கொண்டு தந்தையின் கையை ஆறுதலாக பற்றிபிடிக்கிறான் . மகனது கையை பிடித்துக்கொண்டே வேதனையோடு நடக்க தொடங்குகின்றான் அந்தோனியோ.
இருவரும் அந்தசாலையின் பெரும் கூட்டத்தில் ஐக்கியமாகின்றார்கள் .


இத்தாலிய நியோரியலிச திரைப்படமான  Bicycle Thief 1948ல் வெளியானது. VittorioDeSica இயக்கிய இந்தப்படம், உலகின் முக்கியசினிமாக்களின் பட்டியலில் முதல் 10  இடங்களில் நிச்சயம் இடம்பெறும். இந்தக்கதையை தழுவி பொல்லாதவன் திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
பலருக்கு உலகசினிமா என்பதின் அர்த்தத்தை உணர்த்தியது புருனோவின் கண்ணீரும் அந்தோனியோவின் இயலாமையும் தான்.

யாருமே ஆசைப்பட்டு பிறப்பதில்லை ….
பிறந்த பின்னர் இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் ? வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் மனிதர்கள் எல்லோரும் நிஜமாகவே வாழ்க்கையை ஜெயித்தவர்களா? பெரும்பாலும் இல்லை அவர்கள் வறுமையை ஜெயித்தவர்கள் மட்டுமே என்பதே உண்மை .
நாமும் அதற்காகவே போராடுகிறோம். இந்த உலகத்தில் பணத்தை விட சிறப்பான விஷயங்கள் நிறைய உண்டு ஆனால் அத்தனை விடயங்களையும் பெற்றுக்கொள்ளவும்  தக்கவைக்கவும் பணம்தான் தேவைப்படுகிறது .
பணம் தான் இந்த சமுகத்தின் நிலையை, மனிதர்களின் வாழ்க்கையை முழுமையாக தீர்மானிக்கின்றது. அந்த பணம் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பது அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. அதுவரை அந்தோனியோரிச்சிக்கள் நம்மத்தியில் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள்.