நான் பேசியதில் மோசமான அழைப்பு இது தான் – டிரம்ப்

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஆஸ்திரலியாவிற்கு(Australia) எப்போதுமே தனி இடம் உண்டு. சர்வதேச அளவில் இவ்விரு நாடுகளும் பாதுகாப்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரும் இணக்கத்தை கொண்டுள்ளன. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் அஸ்திவாரத்தையே தற்போது ஆட்டம் காண வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
australia
 கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் 25 நிமிடங்கள் உரையாடி உள்ளார். இந்த பேச்சுவார்த்தை முழுவதும், தான் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து பெருமை பேசிய டிரம்ப், ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அகதிகளை அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் கடுமையாக சாடியுள்ளார்.
 டிரம்ப் அன்று 4 வெளிநாட்டு தலைவர்களுடன் பேசியதாகவும், ஆனால் இதுவரை தான் பேசியதிலேயே “மிக மோசமான அழைப்பு இது தான்” என ஆஸ்திரேலிய பிரதமரிடமே தெரிவித்துள்ளார். மேலும் அகதிகள் உடன்படிக்கையை “மிகவும் மோசமான உடன்படிக்கை” எனவும் அவரிடம் குறை கூறியுள்ளார்.
 டிரம்ப்பின் இத்தகைய நடவடிக்கையால் இரு நாட்டு உறவில் சிக்கல் ஏற்படலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் டிரம்ப் இதேபோல் சில தலைவர்களுடன் பேசி இருந்தாலும், மிகவும் நெருங்கிய நட்பு நாடான ஆஸ்திரேலியாவிடம் அவர் இவ்வாறு நடந்து கொண்டது அதிகாரிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.