தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதறடித்து தமிழ் மக்களுக்கு துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரின்போது போது, இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

தமது நலன்களுக்காக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதறடித்து தமிழ் மக்களுக்கு துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என இந்த உயரிய சபை ஊடாக கேட்டுக்கொள்கின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

“என்னிடம் நேரடியாகத் தெரிவியுங்கள்’ என்ற அலுவலகத்தை ஜனாதிபதி வடக்கில் திறந்து வைத்திருப்பதானது நொந்துபோயுள்ள மக்களை மேலும் ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

மாகாண சபையின் நிர்வாகம் அவசியமில்லை. அனைத்தையும் எம்மிடம் நேரடியாகத் தெரிவியுங்கள் எனக் கூறும் வகையிலேயே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(07) இடம்பெற்ற, ஏற்றுமதி இறக்குமதி கட்டளைகள் திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.