கொழும்பிலுள்ள அமெரிக்க மையத்துக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்க மையம் (American Center) மறு அறிவித்தல் வரும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் குறுங்கால வரவு- செலவுத் திட்டத்துக்கு, அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் அங்கீகாரம் அளிக்க மறுத்துள்ளதால், அமெரிக்காவின் பெரும்பாலான அரச அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

பென்டகன் மற்றும் ஏனைய சில சமஸ்டி முகவர் அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு, செனெட்டின், குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அங்கீகாரம் அளிக்க மறுத்து வருகின்றனர்.

இதனால், உள்ளூர் நேரப்படி,12.01 மணியில் இருந்து அமெரிக்காவின் பெரும்பாலான அரசுப் பணியகங்கள் செயலிழக்கவுள்ளன.

குறிப்பாக நுழைவிசைவு வழங்கும் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டமிட்டபடி, கடவுச்சீட்டு மற்றும் நுழைவிசைவு சேவைகள் தொடரும் என்றும், அமெரிக்க மையம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளது.