800க்கும் மேற்பட்ட ஆபாச இணையத்தளங்கள் முடக்கம்??

நேற்றிலிருந்து பல முன்னணி தொலைத்தொடர்பு சேவைகளில் ஆபாச இணையதளங்கள் செயல்படவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா?

கடந்த மாத இறுதியில் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் 857 ஆபாச இணையதளங்களைத் தடைசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. இதில் 30 தளங்கள் ஆபாச தளங்கள் இல்லையென்றும் அவற்றைத் தவிர்த்து மீதம் இருக்கும் 827 இணையதளங்களைக் தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு அமைச்சரகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதைக் கேட்ட தொலைத்தொடர்பு அமைச்சரகமும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இதை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நேற்று முதல் ஜியோ போன்ற முக்கிய இணையச் சேவைகளில் இந்த 800-க்கும் மேற்பட்ட தளங்கள் செயல்படவில்லை எனச் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்தன. மேலும், பல நிறுவனங்கள் உடனடியாக இந்தத் தளங்களைத் தடைசெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இதே போன்று கடந்த ஜூலை 2015-ம் ஆண்டிலும் ஆபாச தளங்கள் தடைசெய்யப்பட்டது. அதன்பின் வந்த எதிர்ப்புகளால் இணையதள சேவை நிறுவனங்களிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒப்படைத்தது தொலைத்தொடர்பு அமைச்சரகம். Child Pornography கொண்ட தளங்கள்மட்டும் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

தற்போதும் அதே 2015 லிஸ்ட்டில் இருந்த இணையதளங்களைத்தான் மீண்டும் தடைசெய்ய உத்தரவிட்டுள்ளது உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம். இந்தத் தளங்களுக்கு இருக்கும் அளவில்லாத அனுமதிதான் சிறு வயதிலேயே குழந்தைகளின் மனநிலையை மாற்ற முக்கிய காரணமாக இருக்கின்றன எனத் தெரிவித்த நீதிமன்ற அமர்வு, சமீபத்தில்தான் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய நான்கு மாணவர்கள் சம்பவத்துக்கு முன் ஆபாச தளங்கள் பார்த்ததாக ஒப்புதல் அளித்தனர் என்று உதாரணமும் காட்டினர். தற்போது இந்தத் தடை எந்த அளவில் அமல்படுத்தப்படப்போகிறது என்பது இனிதான் தெரியும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]