683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது மிகப்பெரிய வெற்றி என கூறுகிறார் சுமந்திரன்!!

மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தும், தற்போது, மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றி.

அந்தவகையில், அரசாங்கத்தின் நிதி உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து சில உதவித்திட்டங்களை வழங்க உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.சுமந்திரன் இன்று (17) தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வலி.வடக்கு மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிகளை இன்று (17) பார்வையிடச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1200 குடும்பங்கள் மீள்குடியேறக்கூடிய பிரதேசம் தற்போதும், 315 குடும்பங்கள் நலன்புரி முகாம்களில் வசித்துவருகின்றார்கள்.
இந்தப் பகுதி விடுவிப்பு, காணி விடுவிப்பின் மிக முக்கியமான கட்டமாக கருதுகின்றோம். இதிலும் சில பிரச்சினைகள் இன்னும் இருக்கின்றன.

சிறிய இராணுவ முகாம்கள் வீதிகளை மறித்து நடுவில் இருக்கும் காரணத்தினால், சில அசௌகரியங்கள் தொடர்ந்தும் இருக்கின்றது.அந்த அசௌகரியங்களையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம். முயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம்.

இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது.
ஆனால்,மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். ஆதற்கமைய இந்தப்பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல்கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்திருக்கின்றோம்.

காணிவிடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது.
6 ஆயிரத்து 348 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கு மறுத்து, இராணுவ நடவடிக்கைகளுக்காக சுவீகரிப்பு செய்வதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுத்ததுடன், சுவீகரிப்பதற்கான அறிவித்தல்களையும் ஒட்டியிருந்தார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்கான செயலணி ஒன்று நிருவப்படவுள்ளது. அந்த செயலணியினை வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் நிர்வகிப்பார். அரசாங்கம் கொடுக்கும் உதவிகளுக்கு அப்பால், தேவைப்படும் ஏனைய உதவிகளை எமது உறவுகளிடம் இருந்து பெற்று மீள்குடியேறிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேநேரம், ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]