சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் போட்டி – சுரேஷ் பிரேமச்சந்திரன்

சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் போட்டி – சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எனினும் இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஷ் பிரேமசந்திரன் இந்த தகவல்களை வௌியிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

கிராமிய ரீதியாக அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களை வகுப்பதற்காகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் உதவுகின்றன அன்று பாராளுமன்ற தேர்தல் போன்று தேசிய ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழரசு கட்சியின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலை பயன்படுத்தி தமது கொள்கைகளை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபடும் நிலை உள்ளது.

அவர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அரசியல் சாசனம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட இடைக்கால அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்ற நிலைப்பாட்டை நாட்டில் தோற்றுவிக்கக் கூடிய சாத்திப்பாடுகள் இருப்பதாக சுரேஷ்பிரேமசந்திரன் தெரிவித்தார்.

அந்த இடைக்கால அறிக்கையானது பிழையான வழிமுறைகளை கொண்டுள்ளது.

அதேவேளை உள்ளுராட்சி மன்றங்கள் சார்ந்து நகரசபை மாநகரசபை பிரதேச சபை என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்கும் வகையிலான பொது எதிரணி ஒன்றை ஏற்படுத்துவது அவசியம்.

தமிழ் மக்களின் தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டு கிராமிய அபிவிருத்திகளை முன்னெடுக்கக் கூடிய ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில் தாம் பரந்து பட்ட வகையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]