இலங்கையின் உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்த முடியாது – டக்ளஸ் தேவாநந்தா

இலங்கையின் உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்த முடியாது – டக்ளஸ் தேவாநந்தா

இலங்கையின் வெளிநாட்டு கொள்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே நிரந்தரமான கொள்கையாக இன்மையானது, பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகி உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார்.

போக்குவரத்து, பொது விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப்பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, கருத்துகளைத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் மாறுகின்ற அரசாங்கங்கள் தங்களது அரசியல் கட்சித் தேவைகள் கருதிய கொள்கைகளின் அடிப்படையில் வெளிநாட்டுக் கொள்கையினையும் முன்னெடுத்து வந்துள்ளன.

எனினும், எமது நாட்டுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை நிரந்தரமாக வகுத்து, அதனை செயற்படுத்துவதற்குத் தவறிவிட்டுள்ளன.

தலைவலிக்கு உரிய சிகிச்சை அன்றி, அடிக்கடி தலையணைகளை மாற்றிக் கொள்வதாகவே எமது வெளிநாட்டுக் கொள்கையும் இருந்து வருகின்றது.

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டங்களில் எமது வெளியுறத் தொடர்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட போதிலும், அதனை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்பக்கூடிய சூழல் தற்போது போதுமானளவு உருவாகியுள்ளன.

இந்த நிலையிலும், எமது வெளியுறவுக் கொள்கையை மேலும் வலுமிக்கதாகக் கட்டியெழுப்புக் கூடிய சாதகமான வாய்ப்புகள் தட்டிக் கழிக்கப்படுமானால், பின்னர் அதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படாமலும் போய்விடலாம்.

இதற்காக சர்வதேசம் சொல்லுவதை எல்லாம் நாங்கள் செய்ய வேண்டும் என்பதல்ல.

நாங்கள் செய்ய வேண்டியதை நாங்களே செய்தால் போதுமானது.

அந்த வகையில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் யுத்தத்தின் நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டோர் ஆற்றுப்படுத்தப்படல் முக்கியமானது.

எனினும், அது நடந்தேறாத நிலையில் அதன் வடுக்கள் வலித்துக் கொண்டிருக்கின்றன.

அந்த வலியினை எமது மக்கள் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]