37 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்து வரும் ரொபர்ட் முகாபே, பதவி விலக மறுப்பு

சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்து வரும் ரொபர்ட் முகாபே, இராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும்கட்சி 24 மணிநேர கெடு விதித்துள்ள நிலையில், அவர் பதவி விலக மறுத்துள்ளார்.

முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், அண்மையில், அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காக்வா-வை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு – பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 15-ம் திகதி ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முகாபேவை பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் நேற்று நடைபெற்றது. முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த சிம்பாப்வே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை ஜனாதிபதியை நியமித்தும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், 24 மணி நேரத்திற்குள் (திங்கள்கிழமை நண்பகலுக்குள்) கட்சித்தலைவர் மற்றும் ஜனாதிபதி பதவியிலிருந்து முகாபே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் நாங்காக்வா விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகாபே தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றியுள்ளார்.

தனக்கு எதிராக இராணுவம் கிளர்ந்துள்ளது குறித்தோ, கட்சித்தலைவர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது குறித்தோ அவர் பேசவில்லை.

அடுத்த மாதம் ஷானு – பி.எப் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளதாகவும், தலைவர் என்ற முறையில் தான் மாநாட்டில் உரையாற்ற இருப்பதாகவும் முகாபே பேசினார். நாட்டின் இயல்பு நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]