புதிய எல்லை நிர்ணய சதியால் மலையகத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் முயற்சி – கனகராஜ்

புதிய எல்லை நிர்ணய சதியால் மலையகத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் முயற்சி – கனகராஜ்

ஹட்டன் நகரசபை எல்லைகளை குறைத்ததன் மூலமும், தலவாக்கலை லிந்துல நகரசபை எல்லைக்குள் வசித்த தமிழ் மக்களை வெளியேற்றியதன் மூலமும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பறித்தெடுக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதை முற்றுமுழுதாக நிராகரிப்பதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கடுமையான கண்டனத்தை அரசாங்கத்திடம் முன்வைப்பதாக மத்திய மாகாணசபை உறுப்பினரும், காங்கிரசின் ஊடகப் பேச்சாளருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரசபை தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழுகின்ற பிரதேசமாகும்.

தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற இந்த நகரசபையின் எல்லைகளை மாற்றியமைத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை கேள்விக் குறியாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் ஹட்டன் நகரசபை எல்லைக்குள் அமைந்திருந்த பொன்னகர் பகுதியில் சுமார் ஆயிரம் வாக்காளர்கள் வாழும் பிரதேசத்தை நகரசபை எல்லை பிரதேசத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

அதேபோல, வில்பிரட் நகர் பிரதேசத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசமும் அகற்றப்பட்டுள்ளது.

இதனால், இவ்வளவு காலமும் ஹட்டன் நகரசபையோடு தமது நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்கள் பலவந்தமாக பிரதேச சபையை நாட நிர்பந்தித்திக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் நகரசபை எல்லைக்குள் இதுவரை காலமும் நிரந்தரமாக வசித்து வந்த எவருக்கும் அநீதி இளைக்கப்படுவதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

அதேபோல மலையக தமிழ் மக்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்கும் தற்போதைய எல்லை மாற்றத்திற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நாம் தயாராகிவருகிறோம்.

ஹட்டன் நகர சபை மற்றும் தலவாக்கலை லிந்துலை நகரசபை ஆகியவற்றில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைத்து எமது அரசியல் இருப்பிற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இது நுவரெலியா மாவட்டத்தில் சாதனைகளை படைத்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அமைச்சர்களின் கையாலாத தனத்தையே காட்டுகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசை பொருத்தவரையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக ஹட்டன் டிக்கோயா நகரசபை மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபைகளில் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் நடவடிக்கைக்கு துணைபோக முடியாது. இந்தவிடயத்தில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் நாம் தயாரில்லை. எனவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]