இரணைமடுக் குளம் கடந்த இரண்டு வருட கால புனரமைப்புப் பணியின் பின் திறப்பு

இரணைமடுக் குளம் கடந்த இரண்டு வருட கால புனரமைப்புப் பணியின் பின் திறப்பு

இரணைமடுக் குளத்தில் கடந்த இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய புனரமைப்புப் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில், காலபோகச் செய்கைக்காக நேற்று (20) திறந்து விடப்பட்டுள்ளது.

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலும் வட்டக்கச்சி ஒற்றைக்கைப் பிள்ளையார் ஆலயத்திலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இடது கரை வாய்க்காலினதும் வலதுகரை வாய்க்காலினதும் துருசுகளைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளனர்.

வடக்கின் மிகப் பெரும் குளமான இரணைமடுக் குளத்தின் கீழ் ஏறத்தாழ 21,985 ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.

எனினும், கோடை காலத்தில் குளத்தில் தேக்கப்படுகின்ற நீரின் அளவு குறைவாக இருப்பதால், சிறுபோகத்தில் 8000 ஏக்கர் அளவுக்கு மட்டுமே நீர்ப்பாசனம் செய்யக் கூடியதாக இருந்து வந்துள்ளது.

மேலும், குளத்தின் அணைக்கட்டுகளும், வாய்க்கால்களும் மிக நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாததால் வினைத்திறனுடன் நீர்ப்பாசனத்தை முன்னெடுக்கவும் இயலவில்லை.

இவற்றைக் கருத்திற் கொண்டு குளத்தின் நீர்க்கொள்ளளவை 34 அடியிலிருந்து 36 அடிக்கு உயர்த்தி அதிகளவு நீரைச் சேகரிக்கும் பொருட்டுக் குளப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றது.

தற்போது நிர்மான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதன்மூலம் சிறுபோகத்தில் செய்கை பண்ணப்படும் பரப்பளவு 12000 ஏக்கர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புனரமைப்புப் பணிகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 2000 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது.

மேலும், வாய்க்கால்களும், விவசாய வீதிகளும் புனரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கு விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் 3200 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது.

புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாலும் இந்த ஆண்டு மழைவீழ்ச்சி குறைவாக இருந்தமையாலும் குளத்தில் தற்போது 19 அடியே நீர் காணப்படுகிறது.

இந்த நிலையில், காலபோகத்துக்கான நீரை வழங்குமாறு கமக்கார அமைப்புகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், புனரமைப்புப் பணிகள் நிறைவடையவுள்ள நிலையில் முதற்தடவையாகக் குளம் திறந்து விடப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]