சட்டவிரோதமான மீன்பிடியால் பாரம்பரிய தொழில்கள் பாதிப்பு – ஈ.பி.டி.பி.யின் செயலாளர்

சட்டவிரோதமான மீன்பிடியால் பாரம்பரிய தொழில்கள் பாதிப்பு – ஈ.பி.டி.பி.யின் செயலாளர்

யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் தொடர்ந்தும் சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக பாரம்பரிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 5,000 க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அங்கு நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கை எடுப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சரும், மகாவலி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீரவிடம் வடமராட்சி கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடமராட்சி கடற்பகுதியில் கணவாய் மீன் பிடிப்பதற்காக குழை வலைகள் பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமான கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பாரம்பரிய முறையிலான கடற்தொழிலாளர்களது தொழிற்துறைகள் பாதிப்படைந்துள்ளன.

அவர்களது தொழில் உபகரணங்கள் அழிவடைந்து வருவதுடன், கடல் வளங்களும் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்டுள்ள அந்தபகுதி சார்ந்த 12 கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் கையொப்பமிட்டு எழுத்துமூல முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருவது தொடர்பில் நான் ஏற்கனவே தங்களது அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

இந்தநிலையில், தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் ஒரு சில பகுதிகளில் சில காலங்களுக்கு நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

மேற்படி சட்டவிரோத கடற்றொழில் முறைமையை உடன் நிறுத்துவதற்கும், அத்தகைய தொழில் முய்ற்சிகளில் ஈடுபடுவோருக்கு மாற்றுத் தொழில் குறித்த ஈடுபாடுகளை ஏற்படுத்தி, அதற்கான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

சில பகுதிகளில் தடை காரணமாக குறிப்பிட்ட சில காலத்திற்கு நிறுத்தப்படுகின்ற சட்டவிரோதமான கடற்றொழில் முயற்சிகள், பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.

குறித்த தடையை மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் எவை? என்பது தொடர்பாக விளக்கமளிப்பதுடன், உரிய நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்து எமது கடல்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மேற்படி மீன்பிடி தொழிற்சங்கங்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]