56 வருடங்களில் நான் செய்யாத சேவைகளை ஹிஸ்புல்லாஹ் செய்துள்ளார் – பௌசி பெருமிதம்

56 வருடங்களில் நான் செய்யாத சேவைகளை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவரது 25 வருட அரசியல் வாழ்வில் செய்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் 25வருட அரசியல் பதிவுகளடங்கிய கிழக்கின் வாசல் எனும் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையற்றியஅவர்,

56 வருட அரசியல் வாழ்வில் நான் செய்யாத சேவைகளை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவரது அரசியல் வாழ்வில் செய்துள்ளார். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற மன்றத்தில் பேசும் போது நான் அவதானிப்பேன்.

அவர் மூன்று மொழிகளிலும் சிறப்பாக பேசுவார். அனைவருக்கும் விளக்க கூடிய விதத்தில் கருத்துக்களை முன்வைப்பார். சமூகம் சார்ந்து பல விடயங்களை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார்.
எமது சமூகத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சினை வருகின்ற போது எனக்கு தொலைபேசியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டுமாறும், அதே போன்று அது விடயங்களில் பல ஆலோசனைகளையும் வழங்குவார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்த போதும் கூட இறைவன் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினையும், இராஜாங்க அமைச்சுப் பதவியையும் கொடுத்து அவரை இந்தச் சமூகத்திற்கு உதவி செய்ய வைத்துள்ளான்.

நான் மதிக்கின்ற எப்போதும் நேசிக்கின்ற ஒரு அரசியல் தலைவராக ஹிஸ்புல்லலாஹ் காணப்படுகின்றார். பயங்கரவாதம் நிலவிய காலத்திலும் கூட ஹிஸ்புல்லாஹ் நெஞ்சை நிமிர்த்தி சமூகதை பாதுகாத்தார்.

அச்சமில்லாமல் துணிவுடன் சமூகத்துக்காக பேசும் ஒரு தலைவராக ஹிஸ்புல்லாஹ்வை நான் பார்க்கின்றேன். இன ஐக்கியத்தையும் சமூக உறவையும் கட்டிவளர்ப்பதிலும் அவரின் பங்களிப்பு மிக கூடுதலாக உள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]