5 பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்

வலஸ்முல்ல, பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குளவி கொட்டுக்கு இலக்காக 5 மாணவர்கள் மற்றும் காவலாளி ஆகியோர் வலஸ்முல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட மரமொன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இன்றைய தினம் பாடசாலை ஆரம்பமான நிலையில் இந்த குளவி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாணவர்கள், சிகிச்சைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளதுடன் மற்றுமொரு மாணவரும் காவலாளியும் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகளை கைவிடப்பட்டு மாணவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்ப பாடசாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.