வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கல்வியில் நாம் முன்னேற முடியும் – சீனித்தம்பி யோகேஸ்வரன்

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கல்வியில் நாம் முன்னேற முடியும் – சீனித்தம்பி யோகேஸ்வரன்

சீனித்தம்பி யோகேஸ்வரன்

கிழக்கு மாகாணம் கல்வியில் ஒன்பதாவது இடத்தில் காணப்படுகின்றது. இதனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் தான் கல்வியில் நாம் முன்னேற முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை சைவப்புலவர் கே.வி.மகாலிங்கம் சமூக அறக்கட்டளை அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் கல்குடா கல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு தெரிவான வறிய மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

சீனித்தம்பி யோகேஸ்வரன்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. அதில் கல்வியில் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் காணப்படுகின்றது. அதனால் தனிமையில் இருப்பதால் தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்குமாறு கோருகின்றோம்.

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் கல்வியில் அனைத்து விடயங்களிலும் உயர்ந்து செல்வோம். சில இடங்களில் முன்னேற்றம் காணப்படுவதால் தான் நாங்கள் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். இதனால் தான் நீங்கள் கல்வியை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் வைத்திய துறையில் குறைந்த புள்ளிகளுடன் செல்லக் கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதற்கு எதிர்ப்பும், பிரச்சனைகளும் இன்னும் நீடிக்கின்றது. நான் பாராளுமன்ற உயர் கல்விக் குழுவில் இருப்பதால் இதில் எங்களுக்கு பாரிய தலையிடியை தருகின்றது.

பல்கலைக் கழகத்திற்கு தெரிவாவதற்கு ஒரு சில வெட்டுப் புள்ளிகளால் தட்டுப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். அதுபோன்று வறிய மாணவர்களுக்கு இருபது வீதமான நிதியை செலுத்த அனுமதிப்பதற்கான முன் மொழிவுகளையும் வழங்கி இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் மத்தியில் தற்போது சட்டத்தரணிகள், பொறியிலாளர்கள், வைத்தியர்கள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எனவே அவற்றினை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை மாணவர்களிடம் தங்கியுள்ளது.

ஆகவே நாங்கள் வெறுமனே கலைத் துறையில் மாத்திரமின்றி விஞ்ஞானதுறை, பொறியியல்துறை, சட்டத்துறை, வர்த்தகத் துறையிலும் ஆர்வம் காட்ட வேண்டும். கிழக்கு பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது தமழ் மக்களின் நலன் கருதி.

தற்போது கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவை விட்டு ஏனைய அனைத்து பிரிவுகளிலும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள். ஏன் என்று ஆராய்ந்தால் அதில் எங்களின் குறைபாடு காணப்படுகின்றது.

எமது மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பம் அனுப்பும் போது கிழக்குப் பல்கலைக் கழகத்தை முன்னுரிமைப்படுத்தி அனுப்புவதில்லை. ஆனால் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சகோதரர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தை முன்னுரிமைப்படுத்தி விண்ணப்பிப்பதால் இங்கு அனுமதி கிடைக்கின்றது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவு உள்ள படியால் தமிழர்கள் நூறு வீதமாக உள்ளனர். இல்லையேல் ஆங்கில மொழிக்கு மாற்றப்படுமாக இருந்தால் அந்த வீதமும் குறைந்து விடும். கிழக்கு பல்கலைக் கழகம் கிழக்கு வாழ் மக்களுக்கு உதவ முடியாத பல்கலைக் கழகமாக மாறும். எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் கிழக்கு பல்கலைக் கழகத்தை முன்னுரிமைப்படுத்தி விண்ணப்பியுங்கள்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருந்தும் துர்ப்பாக்கிய நிலைமையில் கல்குடா கல்வி வலயத்தை வைத்திருக்கின்றோம். என்னைப் பார்த்து கை நீட்ட வேண்டிய சூழலில் இருந்து கொண்டிருக்கின்றேன். கல்குடா கல்வி வலயத்தில் கல்வியை மேம்படுத்துவதற்கு பல இடங்களில் முயற்சிகளை மேற்கொண்டு முன்னேற்றுவேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]