அரசியல் கைதிகள் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு வழங்க சம்பந்தன் வலியுறுத்தல்

சம்பந்தன்பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரின் விடுதலைத்தொடர்பிலும் 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை இரா.சம்பந்தன் நேற்று முன்வைத்தார்.

இதுதொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதில் வழங்கிய சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, 2015ம் ஆண்டு இருந்த 108 அரசியல் கைதிகளில் 40 பேருக்கு பிணை வழங்கப்படடுள்ளதாகவும், 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் 27 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் நான்கு பேருக்கு வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் சிறையிலேயே மரணித்துள்ளார்.

இதன்படி தற்போது 74 அரசியல் கைதிகள் தடுப்பில் இருக்கின்றனர்.

அவர்களுள் 7 சிங்களவர்களும், 63 தமிழர்களும் ஒரு இஸ்லாமியரும் இருப்பதாகவும், எனவே பயங்கரவாத தடை சட்டம் தனியே தமிழர்களை மாத்திரம் இலக்கு வைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறிக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், புள்ளிவிபரங்களை வழங்குவதால் பயன் ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த அரசாங்கம் தேசியப் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்கவில்லை.

அரசியல் கைதிகளின் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தமது ஆதரவை இழந்து வருகிறது.

தமிழ் மக்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிற்கவில்லை என்று மக்கள் கருதுகின்றனர்.

இந்தநிலையில் அரசாங்கம் இந்த விடயத்தை மிகவும் முக்கியத்துவம் வழங்கிய பார்க்க வேண்டும் என்பதோடு, இதுதொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் சாகல ரத்நாயக்க, அரசியல் கைதிகள் 74 பேரின் விடுதலை தொடர்பிலும் தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை என்றும் கூறினார்.

அதேநேரம், பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக முன்வைக்கப்படவுள்ள தீவிரவாத முறியடிப்பு சட்டமானது, அடுத்த வருடம் முதற்பகுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

தற்போது அந்த சட்டமூலம் சகலரின் இணக்கப்பாட்டுடனும், சர்வதேச தரத்துடனும், தேசியப்பாதுகாப்பு மற்றும் தற்கால சூழ்நிலைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் நாளையதினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, நீதி அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க யோசனை முன்வைத்தார்.

இதன்போது எழுந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகள் குறித்து கருத்து வெளியிட்டார்.

அவர்கள் குறித்து தாம் தனிப்பட்டவகையில் சட்ட மா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்களது வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் மொழிசார்ந்த பிரச்சினை நிலவுவமாக இருந்தால், அவர்கள் சார்பில் மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், குறித்த அரசியல் கைதிகள் 21 நாட்களாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள போதும், அவர்களின்  உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும், தேவையான சிகிச்சைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.