இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

பாகிஸ்தான் அணியுடன், பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற திட்டமிட்டுள்ள மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி கலந்துகொள்ளுமா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கட் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

இரு அணிகளுக்கும் இடையில் நடத்த திட்டமிட்டுள்ள குறித்த போட்டி தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் 40 வீரர்கள் கைச்சாத்திட்ட கடிதமொன்று ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த போட்டியினை வேறொரு மைதானத்தில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த போட்டியை லாகூரில் நடத்துவதற்கு இலங்கை பயிற்சியாளர்கள் உள்ளிட்ட உதவி பணியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் ஹசான் திலக்கரத்ன, பந்துவீச்சு பயிற்சியாளர் ரொமேஸ் ரத்நாயக்க, முகாமையாளர் அசங்க குருசிங்க அணியின் பிரதான பயிற்சியாளர் நிக்போதாஸ் மற்றும் உதவி பணியாளர்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக விளையாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று டுபாயில் இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கும் இடையிலான 150வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.