40 நாட்களாக முகாமில் தஞ்சம் அதிகாரிகள் கவனிப்பதில்லை – ஹோல்புறுக் புதிய கொலனி மக்கள் விசனம்

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோல்புறுக் புதிய கொலனி பகுதியில் கடந்த 29.05.2017 அன்று மண் மட்டும் கற்கள் சரிவு காரணமாக ஐந்து வீடுகளில் வசித்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் தற்காலிமாக ஹோல்புறுக் கிறிஸத்தவ ஆலயமொன்றில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு கிராம சேவகரால் உலர் உணவு தவிர வேறு எந்த உதவியும் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

22 குடும்ப அங்கத்தவர்களும் ஒரே அறையில் தங்கியிருக்க வேண்டியுள்ளாதால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் வசதி குறைந்த நிலையில் தாம் இந்த இடத்தில் தற்காலிகமாக வாழ்வதனால் தொழிலை செய்ய முடியாதுள்ளதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக இந்த குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் தங்களது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்தவர்களில் க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் உட்பட பல்வேறு வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் எவ்வித வசதியுமின்றி இரண்டாம் தவனை தேசிய பரீட்சைகள் நெருங்கிவரும் நிலையில் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரத்துக்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் எல்.ஆர்.சி காணியொன்யை பெற்றுத்தருமாறு தெரிவித்திருந்த போதிலும் அது தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

இது குறித்து இவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த மே மாதம் 29 திகதி மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிவு காரணமாக எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு சொல்லிவிட்டனர். எங்களுக்கு எந்த வசதியும் இங்கு இல்லை. கிராம சேவகர் மாத்திரம் வந்து எங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்குகிறார்.

ஆனால், குழந்தைகளுக்குத் தேவையான பால் உட்பட அனைத்தும் நாங்கள் தான் வாங்க வேண்டும். இன்றுள்ள நிலையில் நாங்கள் வேலைக்குச் செல்ல முடியாது. பால் மா எவ்வாறு வாங்குவது, எமது பிள்ளைகளை எவ்வாறு படிக்க வைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு வகைகளை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது, கற்றல் உபகரணங்களை எவ்வாறு வாங்குவது, என அழுது புழம்பினர். எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் அக்கறை காட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]