4 உயிர்களை காப்பாற்றி தீயில் கருகிய கர்ப்பிணி தாயார் – உத்தரப் பிரதேசத்தில் சம்பவம்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிபத்தினிடையே கட்டிடம் இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் 8 மாத கர்ப்பிணியான ஃபாத்திமா என்ற யுவதி தமது நான்கு பிள்ளைகளையும் போராடி காப்பாற்றிய பின்னர் மரணத்திற்கு சரணடைந்துள்ளார். 27 வயதான ஃபாத்திமா தமது உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் 4 பிள்ளைகளையும் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.

ஃபாத்திமா குடியிருந்த கட்டிடத்தின் தரைதளத்தில் செயல்பட்டு வந்த இனிப்பகத்தில் இருந்து கொழுந்துவிட்டெரிந்த தீ இவர்களின் குடியிருப்புக்கும் வியாபித்துள்ளது. தீ விபத்து குறித்து தெரியவந்ததும் துரிதமாக செயல்பட்ட ஃபாத்திமா தமது நான்கு பிள்ளைகளையும் ஜன்னல் வழியாக பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டுள்ளார்.

பிள்ளைகள் நால்வரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த ஃபாத்திமா அதன் பின்னர் தாம் தப்பித்துக்கொள்ள வழி தேடியுள்ளார். ஆனால் அருகாமையில் இருந்த கட்டிடம் இடிந்து ஃபாத்திமாவின் மீதே விழுந்துள்ளது. இதில் சிக்கிய ஃபாத்திமா சுய நினைவை இழந்துள்ளார். அதே வேளையில் எரிவாயு சிலிண்டர்கள் ரெண்டு வெடித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாயார் கொல்லப்படுவதை பிள்ளைகள் நால்வரும் கண்ணீருடன் பார்த்து நின்றுள்ளனர்.

இதனிடையே தீக்காயங்கள் காரணமாக பிள்ளைகளை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஃபாத்திமாவின் கணவரும் அவரது சகோதரர்களும் இனிப்பகத்தின் வெளியே பரிதவிப்புடன் நின்றுள்ளதாகவும், உதவிக்கு எவரும் முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]