4 இலங்கையர் உட்பட ஏழ்வர் கைது

கடல்வழியாக போதை மருந்தை கடத்த முற்பட்ட நான்கு இலங்கையர்கள் உட்பட ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, தமிழக சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வேம்பார் முதல் திரேஸ்புரம் வரையிலான கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.

இதன்படி நேற்று முன்தினம் திரேஸ்புரம் பகுதியில் ஒரு படகில் பெரிய பையை ஏற்ற சிலர் முயற்சித்தனர். அவர்களை சுங்கத்துறையினர் மடக்கி பையை கைப்பற்றி, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் அந்த பையில் இருந்தது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ‘மெத்தாக்குலைன்’’ என்ற போதை பொருள் என உறுதிப்படுத்தப்பட்டது.

இது ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளுக்கு, நோயின் தன்மை குறித்து ஆய்வு பணிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அனுமதி பெறாமல் இதை மருத்துவத் துறையில் கூட பயன்படுத்த முடியாது.

பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ எடை கொண்ட இந்த போதை பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி இந்திய ரூபாய் என தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இது தொடர்பாக கீழ வைப்பாறையைச் சேர்ந்த சந்தியாகு (55), தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக துணைச் செயலாளர் மைக்கேல் ரெக்ஸ் (60), ஓட்டப்பிடாரம் கல்லூரி மாணவர் அசோக்குமார் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அவர்கள் இலங்கைக்கு இந்த போதைப் பொருளை படகு மூலம் கடத்தவிருந்ததும், இதைப் பெற்றுக்கொள்ள இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிப்பது போல இந்திய கடல் எல்லைக்குள் வந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றொரு படகில் கடலுக்குள் சென்று அங்கு விசைப்படகில் காத்திருந்த இலங்கை இளைஞர்கள் நால்வரை கைதுசெய்தனர்.
அத்துடன் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.