32 பெண் வேட்பாளர்கள் இணைந்து வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம்

பெண் வேட்பாளர்கள்

32 பெண் வேட்பாளர்கள் இணைந்து வெளியிட்ட உள்ளுராட்சி மன்ற பெண்களின் தேர்தல் விஞ்ஞாபனம்

யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாம். பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் பாதிப்புக்களிலிருந்து மீண்டுவர அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் தொழினுட்ப ஆற்றல், தகைமை மற்றும் தலைமைத்துவம்; பெறவும், அவர்களுக்கான ஒளிமயமான வாழ்வுக்கு கட்டியங் கூறவும் பெண்கள் நாம் இம்முறை தலைமைத்துவப் பொறுப்பினைத் தேர்தலில் பெறுவோம் ; மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சகல கட்சிப் 32 பெண் வேட்பாளர்கள்; இணைந்து வெளியிட்ட உள்ளுராட்சி மன்ற பெண்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளனர்

நீதிக்காகப் போராடத் தயாராகின்ற பெண்களாகிய நாம் இம்முறை புதியதொரு ஜனநாயகரீதியிலான அரசியற் பண்பாட்டைப் படைக்கப் போவது உறுதி. எமது அரசியல் சமூகத்தில் வாழும் சகல மக்களையும் எவ்வித இன, மத, மொழி வேறுபாடின்றி அவர்களை மதித்து, அவர்களின் தேவைகளை அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பு, பங்களிப்புடன் நிறைவேற்ற முன்னின்று செயற்படுவோம் என்றும் கூறியுள்ளனர்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி கிறீன் ஹாடின் ஹோட்டல் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சகல கட்சிப் 32 பெண் வேட்பாளர்கள்; இணைந்து வெளியிட்ட உள்ளுராட்சி மன்ற பெண்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளது.

பெண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள் பெண் வேட்பாளர்கள்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின நிகழ்ச்சித் திட்ட அதிகாரி திருமதி இந்துமதி ஹரிகர தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீண்டு சற்று மூச்சு விடும் தருணத்தில்தான் எமக்கு புரிகின்றது. சத்தங்கள் ஓய்ந்தாலும் எமது சமூக, பொருளாதார,கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களின் இருப்பு கேள்விக்குரியதென்று. ஆம் எதிர்காலத்தையே எவ்வாறு சமாளிக்கப் போகின்றோமென்ற தவிப்பு.

இதை மீளக் கட்டியெழுப்புவது எப்படியென்ற சிந்தனைக்கு முன்பாகவே எமது பிரதேசத்தின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை. எமக்கென தனித்துவமானதொரு அரசியற் தளத்தினைப் போடவேண்டுமெனில்,கடந்தகால அரசியலுக்கு மாறுபட்ட விதத்தில் மக்களின் சமூக, பொருளாதார,கல்வி மற்றும் பண்பாட்டில் மேம்பாட்டினைக் கொணர்வதன் ஊடாகவே இதனை அடைய முடியும். அதனால்தான் பெண்களாகிய நாம் பொறுத்தது போதுமென்ற நிலையில் நீதியையும், நியாயத்தினையும் எமது பிரதேசத்தில் நிலைநாட்ட இம்முறை உள்ளுராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட கட்சிகள் மூலமாகவும், சுயேட்சைக் குழுக்கள் மூலமாகவும் களம் இறங்கியிருக்கின்றோம்.

நீதிக்காகப் போராடத் தயாராகின்ற பெண்களாகிய நாம் இம்முறை புதியதொரு ஜனநாயகரீதியிலான அரசியற் பண்பாட்டைப் படைக்கப் போவது உறுதி.

எமது அரசியல் சமூகத்தில் வாழும் சகல மக்களையும் எவ்வித இன, மத, மொழி வேறுபாடின்றி அவர்களை மதித்து, அவர்களின் தேவைகளை அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பு, பங்களிப்புடன் நிறைவேற்ற முன்னின்று செயற்படுவோம்.

இங்கு எமது வெளிப்படைத் தன்மை, சமூகத்தின் மீதான பொறுப்புடைமை மற்றும் சமூகத்திற்குக் கணக்குக் காட்டுந் தன்மை போன்றவற்றால் எமக்கு சமூகத்தின் செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், மதத் தலைவர்கள், அரசியற் தலைமைத்துவங்கள் என அனைவரும் பக்கபலமாக இருப்பார்கள்;.

உண்மையும் , நேர்மையும் கொண்ட எமது அரசியலில் தனி மனித சிபாரிசுகளோ, பொய்யான வாக்குறுதிகளோ அல்லது சலுகை காட்டி வாக்குப் பெறுவதோ இருக்காது.

பல வருடங்களாக சமூகத்திற்குப் பணியாற்றிய எமக்கு மக்களின் ஆதரவு இந்த வட்டாரமுறைத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தரும்.
எம்மால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், ஊழல் நடவடிக்கைகளுக்குத் துணைபோகாத, பக்கச்சார்பற்ற, வெளிப்படைத் தன்மை பேணப்படும்.

வன்முறையினால் வளர்ந்த அரசியலை மாற்றி வன்முறையற்ற, சகலருக்கும் நன்மை பயக்கும் அரசியற் பண்பாட்டை மீளவும் எமது சமூகத்தில் எமக்காக, எம் தாய்மாருக்காக, எம் சகோதர சகோதரிகளுக்காக உருவாக்குவோம்.

உள்@ராட்சி மன்றங்களின் சகல சேவைகளையும் சரூகத்தின் சகல தரப்பினரும் பெறக் கூடியதாகச் செய்வோம். ஒவ்வொரு குடிமகனின் திட்டமிடலையும், பங்கேற்பையும், பங்களிப்பையும், அமுற்படுத்தலையும், கண்காணிப்பினையும் மக்களுக்கான சேவைகளில் உறுதிப்படுத்துவோம்.

இன, மத, மொழி பேதமின்றி எந்தக் கட்சியில் பெண் போட்டியிட்டாலும் அவளுக்கான முழுமையான ஆதரவினை மக்களுடன் இணைந்து வழங்குவோம்.

தேர்தல் வன்முறைகளையும், அரசியற் பழிவாங்கல்களையும் சமூகத்தில் அடியோடு இல்லாதொழித்து புதியதொரு வன்முறையற்ற அரசியற் பண்பாட்டினை ஏற்படுத்துவோம்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 வீதம் பெண்கள். இன்னும் வாக்களிக்கும் சனத்தொகையில் 56 வீதம் பெண்கள். இந்த நிலையில் கடந்த காலங்களில் பெண்ணுக்கொரு வாக்களித்து அவளது வெற்றிக்கு வாய்ப்பளிக்காத ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் உணர்ந்து பெண்களினை நேரடி வேட்பாளராக உள்வாங்கிய கட்சிகளுக்கும், கூடுதலான பெண்களை உள்வாங்கிய கட்சிகளுக்கும் தனது மனப்பாங்கினை மாற்றி பெண்களின் புதிய அரசியற் பிரவேசத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இம்முறை பெண்களின் வெற்றிக்காகப் போராட வழிசமைப்போம்.

யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாம். பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்கள் பாதிப்புக்களிலிருந்து மீண்டுவர அவர்களுக்கான வாழ்வாதார மற்றும் தொழினுட்ப ஆற்றல், தகைமை மற்றும் தலைமைத்துவம்; பெறவும், அவர்களுக்கான ஒளிமயமான வாழ்வுக்கு கட்டியங் கூறவும் பெண்கள் நாம் இம்முறை தலைமைத்துவப் பொறுப்பினைத் தேர்தலில் பெறுவோம்.

எங்கள் அரசியல் மொழியானது இனிமை, சிநேகம், புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, ஆழ்ந்த சிந்தனை, கடும் முயற்சி, உறுதி, சுயகௌரவம், பணிவு, தன்னடக்கம் கொண்டதாக இருப்பதனாலேயே உங்கள் தாயாக, சகோதரியாக, மகளாக உங்களுக்காகத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்: என தேர்தல் விஞ்ஞபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]