30 வருடகாலமாக சொந்தக் காணிகளில் குடியேற வேண்டும் என்று மக்கள் தவிக்கின்றனர்; தீர்வு அவசியம் என்கிறார் சம்பந்தம்

30 வருடகாலமாக சொந்தக் காணிகளில் குடியேற வேண்டும் என்று மக்கள் தவிக்கின்றனர். எனவே, காணிப் பிரச்சினைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றி போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவத் தளங்கள் தாக்கப்படலாம், ஆயுதங்கள் இருந்தன என்ற அடிப்படையில் மக்களின் காணிகளைக் கைப்பற்றி வைத்திருந்தனர்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துவிட்டது. புலிகளும் இல்லை. எனவே, பொது மக்களின் காணிகளை அரசு காலம் தாழ்த்தாது உடனடியாக கையளிக்க வேண்டும்.
மக்கள் காலங்காலமாக வாந்துவந்த காணிகளில் மீண்டும் வாழும் வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

மக்களின் வைத்திருக்கும் அதிகாரம் இல்லை. என்றாலும், ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் கட்டளையிட்டாள் காணிகளை விடுவிக்க தயார் இராணுவத் தளபதி கூறினார். கேப்பாபுலவு, வலி.வடக்கும், முள்ளிக்குளம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பிலும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடினோம்.

மக்கள் நீண்டகாலம் காத்திருக்கின்றனர். ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் கடந்தும் காணிகள் இதுவரை கையளிக்கப்படவில்லை. இந்த விடயத்து விரைவில் தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, காணி விடுவிப்புத் தொடர்பில் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவில் படையினர் மற்றும் அரசாங்க அதிபர்களுடன் விசேட கூட்டங்களும் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]