குப்பை கொட்டும் நாடுகளில் இலங்கைக்கு 5ஆவது இடம்

கடலுக்குள் கழிவுகளைக் கொட்டும் நாடுகளின் வரிசையில், இலங்கையானது ஐந்தாவது இடத்தில் உள்ளதாக, ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுற்றாடல் அறிவியலாளர்கள் குழுவொன்று, மேற்கொண்ட ஆய்விலேயே மேற்கண்ட தரவு வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில், இலங்கையானது வருடந்தம், 1.6 மில்லியன் மெற்றிக்தொன் கழிவுகளை கடலுக்குள் கொட்டிவிடுகின்றது.

அந்த அறிக்கையின் பிரகாரம், கடலுக்குள் கழிவுகளை அகற்றும் பட்டியலில் சீனாவே முதலிடத்தில் உள்ளது. சீனா, வருடமொன்றுக்கு 8.8 மில்லியன் மெற்றிக்தொன் கழிவுகளை கடலுக்குள் அகற்றிவிடுகின்றது.

இரண்டாவது இடத்தில் இந்தோனேஷியா உள்ளது. அந்நாடு, வருடமொன்றுக்கு 3.2 மில்லியன் மெற்றிக்தொன் கழிவுகளை, கடலுக்குள் அகற்றிவிடுகின்றது.

அறிக்கையின் பிரகாரம், மூன்றாவது இடத்தை பிலிப்பைன்ஸூம் நான்காவது இடத்தை வியட்நாமும் தன்னகத்தே கொண்டுள்ளன.

இதேவேளை, ஆசிய நாடுகள், கடலுக்குள் கழிவுகளை கொட்டுவதை, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு சதவீதத்துக்கும் குறைவான கழிவுகளையே ஐரோப்பிய நாடுகள் கடலுக்குள் கொட்டுகின்றன.

இந்த அறிக்கையின் பிரகாரம், ஏழாவது இடத்தில் இருக்கின்ற அமெரிக்காவானது வருடத்துக்கு 0.3 மில்லியன் மெற்றிக்தொன் கழிவுகளையே கடலுக்குள் அகற்றிவிடுகின்றது.

மனிதனின் செயற்பாடுகள் காரணமாகவே, கழிவுகளில் 80 சதவீதமானவற்றை இலங்கை கடலுக்குள் கொட்டுகின்றது. ஆகையால்தான், 5ஆவது இடத்திலிருக்கின்றது என்று, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

கழிவுகளை இவ்வாறு கடலுக்குள் கொட்டுவதால், சதுப்புநிலக் காடுகள் மற்றும் பவளப்பாறைகள் மிக வேகமாக அழிவடைந்து செல்வதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரோஹன பெரேரா தெரிவித்தார்.

நமது நாட்டில், இருக்கின்ற மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடலோடு இணைந்திருக்கின்றன. அதில், சுற்றூலாத்துறையினர் அதிகளவில் வருகின்ற கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு, கடலுக்குள் கழிவுகளை அகற்றுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நீர்கொழும்பு களப்புக்குள் கழிவுகளை அகற்றுவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு தென்கொரியா உதவி வழங்கியுள்ளது. அதற்காக இரண்டு வருடகால புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரோஹன பெரேரா மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]