25 வீத பெண்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

25 வீத பெண்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

எதிர் வரும் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25% பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான திருத்தச்சட்டத்தின்படி அந்தத் தேர்தல்களின்போது தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களில் 25% பெண் வேட்பாளர்கள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முஸ்தப்பா கூறினார்.

“எனவே 25% பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் சட்ட விரோதமானதென்று கருதப்படும். அவ்வாறான வேட்பு மனுக்கள் தேர்தல்கள் அதிகாரிகளினால் நிராகரிக்கப்ப்படும்,” என்று அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் சில அரசியல் கட்சிகள் இந்த சட்ட திருத்தத்தை அலட்சியப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

பெண் வேட்பாளர்களுக்கு தகுந்த இடத்தை வழங்க விரும்பாத காரணமாக சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறிய பைசர் முஸ்தப்பா, பெண் வேட்பாளர்களுக்கு தகுந்த இடத்தை வழங்க அரசியல் கட்சி தலைவர்கள் முன்வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக பின்போடப்பட்டு வந்த இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறுமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான அரச வர்த்தமானி அறிவித்தலை அரச அச்சகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]