24ஆவது ‘கலா பொல’ கண்காட்சியானது ஜனவரி 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் இடம்பெறும்

உலகப் புகழ்பெற்ற ‘கலா பொல’ (Kala Pola) திறந்தவெளி ஓவியக் கண்காட்சியானது 24ஆவது தடவையாக, கொழும்பு 7 இலுள்ள ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையின் நடைபாதை ஓரங்களில் மீண்டும் ஒருமுறை வர்ணமயமாகவும் நட்புணர்ச்சியுடனும் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேன்மைதங்கிய பிரைஸ் ஹட்செஸ்சன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இக் கண்காட்சி 2017 ஜனவரி 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 8.00 மணிக்கு ஆரம்பமாகி, அன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து இடம்பெறும். அதன்படி நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை இக்கண்காட்சி தம்பக்கம் கவர்ந்திழுக்கும். உலகின் பல பாகங்களிலும் இருந்துவரும் உல்லாசப் பிரயாணிகள் மற்றும் நாட்டு மக்கள் என பெருமளவிலான பார்வையாளர்களும் இக்கண்காட்சியை பார்வையிட்டு, குதூகலம் நிறைந்த அந்தச் சூழலில் கிடைக்கக் கூடியதாகவுள்ள இலங்கையின் பல வகையான ஓவியங்களை அவர்கள் கொள்வனவும் செய்ய முடியும்.

கண்காட்சியின் உத்தியோகபூர்வ நிகழ்வு அன்றைய தினம் பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகும். அப்போது முதல் முடிவு வரை, கண்ணைக்கவரும் மற்றும் மனதைமயக்கும் விந்தைகள் நிறைந்த கலாசார களிப்பூட்டல் நிகழ்ச்சிகள் அங்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் அரங்கேறும்.

ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற ‘கலா பொல’ கண்காட்சியானது கடந்த 24 வருடங்களாக கலாசார மற்றும் சுற்றுலா சார்ந்த அடிப்படையில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக திகழ்கின்றது. இக் கண்காட்சி 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து – பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இடம்பெறும் புகழ்பெற்ற ‘மொன்ட்மாட்ரெ’ போன்று, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இடம்பெறும் பல்வேறு திறந்தவெளி ஓவியக் கண்காட்சிகளின் தூண்டுதலை உள்வாங்கிக் கொண்டுள்ளது, அன்றுமுதல், இது ஒரு சிறப்பான கலாசார நிகழ்வாக மாற்றமடைந்திருப்பதுடன், கொழும்பின் வருடாந்த கலாசார நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் யாராலும் தவறவிடப்பட முடியாத ஒரு நிகழ்வாகவும் இன்று காணப்படுகின்றது.