21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் மன்னார் மனித புதை குழி அகழ்வுகளின் போது மீட்பு

மன்னார் மனித புதை குழி அகழ்வுகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (11) 115 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை 3.30 மணியளவில் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

குறித்த புதை குழியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை வரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்பப்படும்.கடந்த வாரம் அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது சுமார் 2 மீற்றர் அளவில் சந்தேகத்திற்கு இடமான மனித எலும்பு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எலும்பு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை இவ்வாறான 3 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது.

இது வரை அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]