2020ம் ஆண்டில் சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

 


எதிர்வரும் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போட்டியிடுவாறா என்பது குறித்து தொடர்ந்தும் சர்ச்சைகள் நீடிக்கின்றன. கட்சியின் ஒருசாரார் போட்டியிடுவார் எனவும், ஒருசாரார் போட்டியிட மாட்டாரெனவும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் 2020 இல் சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மகளிர் சங்கங்கள், இளைஞர் சங்கங்கள், தொழிற்சங்கள் என பல்வேறு தரப்பும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வருவதாகவும், அதனடிப்படையில் அவர் அதனை ஏற்றுக்கொள்வாரென்ற நம்பிக்கை உள்ளதாகவும், சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாற்று கருத்தொன்றை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டில் தற்போதைய ஜனதிபதியை வேட்பாளராக களமிறக்குவது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் என்ற வகையில் தான் அது குறித்து அறியவில்லையெனவும், முன்னாள்; ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.