2019 உலகக் கிண்ணம்: இலங்கையின் இருப்பை தீர்மானிக்கும் இந்திய தொடர்

டெஸட் போட்டிகளில் வெள்ளையடிப்புத் தோல்வியை சந்தித்த இலங்கை அணிக்கு, நாளை (20) ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான ஒருநாள் போட்டித்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் தான் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைக்கும் என சர்வதேச கிரிக்கட் பேரவை நேற்று அறிவித்தது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதிவரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், உலகக் கிண்ண போட்டியில் நேரடியாக இணைந்து கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரப்படுத்தலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே 2019 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறும்.

இந்த நிலையில், அந்தப் போட்டிக்கு இலங்கை அணி நேரடியாக தகுதிபெறுவதை தீர்மானிக்கும் தொடராக இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள தொடர் அமையவுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் 90 புள்ளிகளைப் பெற்று 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ளும் தகைமையை இலங்கை அணி பெறமுடியும்.

எனினும், இந்தத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறத் தவறுமாயின், 2 புள்ளிகளை இழந்து 86 புள்ளிகளை பெறும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் இலங்கை அணியைவிட 10 புள்ளிகள் பின்னிவையில், 78 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, உலகக் கிண்ண போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பு செல்லும்.

குறித்த காலப்பகுதிக்குள் மேற்கிந்திய தீவுகள் அணி, 6 ஒருநள் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது.

அந்த ஆறு போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், 8 ஆம் இடத்துக்கு முன்னேறும்.

இதனூடாக மேற்கிந்திய தீவுகள் அணி, 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும்.

மேற்கிந்திய தீவுகள் அணி, 6 போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்றுள்ள நிலையில், இலங்கை அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் அந்த வாய்ப்பை தமதாக்கலாம்.

எனினும், நடைபெற்றுமுடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி சந்தித்த பாரிய தோல்வியால், அதன் மீது பாரிய விமர்ச்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும், இலங்கை அணியின் ரசிகர்கள் ஒருநாள் அணியின் மீது நம்பிக்கை வைக்குமாறு அணித் தலைவர் உபுல் தரங்க முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2019 world cup