200க்கும் அதிகமான பொருட்களின் GST வரி குறைப்பு

200க்கும் அதிகமான பொருட்களின் GST வரி குறைப்பு

அடுத்த வாரம் முதல் 200 க்கும் அதிகமான பொருட்களின், சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அசாம் மாநிலத்தின் தலைநகர் கௌஹாத்தியில் நடைபெற்ற 23 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பின்னர் ஜி.எஸ்.டியின் அதிகபட்ச வரி விகிதமான 28 சதவீதத்தின்கீழ் 50 பொருட்கள் மட்டுமே உள்ளன.

கடந்த ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டபோது மொத்தம் 228 பொருட்களுக்கு 28% வரி இருந்தது. தற்போது அவற்றுள் 178 பொருட்களுக்கு 18% ஆக ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

கார், இரு சக்கர வாகனம், குளிர்சாதனப் பெட்டி, அழகு சாதனப் பொருட்கள், பற்பசை, தோல் பை, மார்பில் மற்றும் கிரானைட் கற்கள், சாக்லெட், பான் மசாலா, பிளாஸ்டிக் பொருட்கள், சுவரில் பூசப்படும் வர்ணம் உள்ளிட்டவை அப்பட்டியலில் அடக்கம்.

இந்த மாற்றங்கள் வரும் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று இந்தக் கூட்டத்திற்குப்பின் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

18% ஆக ஜி.எஸ்.டி வரி இருந்த 13 பொருட்கள், 12% வரி உள்ள பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 18% ஆக இருந்த ஆறு பொருட்களின் ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 12% ஜி.எஸ்.டி வரி இருந்த எட்டு பொருட்களின் வரி 5% ஆக குறிக்கப்பட்டுள்ளதுடன், 5% ஆக இருந்த ஆறு பொருட்கள் ஜி.எஸ்.டி வரி வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]