முகப்பு News Local News 20ஆவது திருத்ததால் மஹிந்தவுக்கே பயன்

20ஆவது திருத்ததால் மஹிந்தவுக்கே பயன்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்ததை கொண்டு வந்தால் அதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பயனடைவார் என, சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை காணப்படுமாக இருந்தால், மஹிந்த ராஜபக்ஷவால் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக முடியாது என்றும் 20 ஆவது திருத்ததை கொண்டு வந்தால் நிறைவேற்று பிரதமராக ஆக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அர்ஜூன் மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் மாத்திரமே நியுயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் பதிலளிப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரமும் நியுயோர்க் டைம்ஸ் விவகாரமும் ஒன்றல்ல என்றும் அவற்றை இணைக்க பார்க்க முடியாது என்பதால் முன்னாள் ஜனாதிபதி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மத்திய வங்கி மோசடியுடன் தொடர்படைய அர்ஜூன அலோசியஸ் இன்னும் சிறையிலேயே உள்ளதாகவும் அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க ஆகிய இருவரும் நாட்டுக்கு விரைவில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com