முகப்பு News 20ஆவது அரசியமைப்பு திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில்

20ஆவது அரசியமைப்பு திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில்

20ஆவது அரசியமைப்பு
ஜே வி பியினால் முன்வைக்கப்பட்ட 20ஆவது அரசியமைப்பு திருத்தச் சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் அங்கீகாரத்தின் பின்னர் இந்த சட்ட மூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதன்படி இந்த சட்டமூலம் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக முன்வைக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜே வி பியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யப்படுவார்.

அத்துடன், ஜனாதிபதியே நாட்டின் தலைவராகவும், படைகளின் கட்டளைப் பிரதானியாகவும் செயற்படுவார்.

எனினும், அரசாங்கத்தின் தலைவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் நாட்டின் பிரதமரே செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை, பிரதமர், அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள், பகிர்ந்தளிக்கப்படும்.

அதேநேரம் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக மாகாணங்களுக்கான ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் இருக்கும்.
அத்துடன், ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு, அமைச்சரவையின் அனுமதிபெறப்பட வேண்டும்.

மேலும், ஜனாதிபதி செயலணியின் அதிகாரிகளது எண்ணிக்கையும் அமைச்சரவையாலேயே தீர்மானிக்கப்படும்.

அதேநேரம், ஜனாதிபதியாக ஒருவர் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பதவிக்காலம் நிறைவடையும் வரையில், அவர் எந்த அரசியல் கட்சியிலும் எந்தவித பதவி அல்லது உறுப்புரிமையையும் வகிக்க முடியாது.

எவ்வாறாயினும் 20ஆம் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அது தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைந்தப் பின்னரே அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com