2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு சாதனை படைத்த இலங்கை அணி!

இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள  இலங்கை முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் கடந்த 21ஆம் திகதிஆரம்பமானது.

இதன் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சில் இலங்கை 154 ரன்களில் ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா 128 ரன்களில் சுருண்டது.

இதையடுத்து 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் கருணரத்னே 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து திரிமன்னேவுடன் பெர்ணாண்டோ இணைந்தார். இவர் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் பெர்ணாண்டோவுடன் குசல் மெண்டீஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் இறுதிவரைஆட்டமிழக்காமல், பெர்ணாண்டோ 75 ரன்களும், மெண்டீஸ் 84 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து இலங்கை அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 197 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.

ஆட்ட நாயகனாக குசல் மெண்டீசும், தொடர் நாயகனாக குசல் பெரேராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தென் ஆப்பிரிக்கா மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]